தமிழ் சினிமாவில் காணாமல் போன எத்தனையோ விஷயங்களில் ஒன்று 50 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள் போஸ்டர். ஏன், சில படங்கள் 200 நாளைக் கடந்தும், சில படங்கள் 300 நாள், ஒரு வருடம் கூட ஓடியிருக்கின்றன. ஆனால், இப்போதெல்லாம் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு 25வது நாள் போஸ்டர்களைப் பார்ப்பது கூட ஆச்சரியமாகப் போய்விட்டது. நாட்களுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் காட்சிகளுக்காகத் தற்போது ஒட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. 100 நாள் விழாக்களும், அதற்கான ஷீல்டுகளும் திரையுலகினரின் வீட்டை அலங்கரித்தெல்லாம் காட்சிப் பொருளாகப் போய்விட்டன.

இந்த ஆண்டில் சில படங்கள் 50 நாளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும் போது ஆச்சரியமாகவே உள்ளது. அந்த வரிசையில் 50வது நாள் போஸ்டரை வெளியிடும் அதிர்ஷ்டத்தை ‘மெர்சல்’ படம் பெற்றுள்ளது. அதிர்ஷ்டம் என்று சொல்வதில் தவறு எதுவுமில்லை. விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறாத ‘மெர்சல்’ படம், தமிழக பாஜகவினர் எழுப்பிய சர்ச்சையால் திடீரெனப் பிரபலம் ஆகியது. அதுவே அந்தப் படத்திற்கு ரசிகர்களை வரவைக்கும் கருவியாகவும் மாறியது.
கடந்த வாரம் கூட சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படம் ஓடிக் கொண்டிருக்கும் சில தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகள் நடைபெற்றது என்கிறார்கள். இப்படத்தின் வெற்றி மற்றவர்களைக் காட்டிலும் விஜய்க்கு மிகப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும். படத்திற்காக எழுந்த சர்ச்சை அவரை நோக்கியும் சென்றதே அதற்குக் காரணம். அவரைப் பற்றி இந்திய மீடியாக்களே பேசின.



Leave A Comment
You must be logged in to post a comment.