உலக அளவில் தேடல் இணையதளங்களில் முதலிடத்தில் இருப்பது கூகுள் தேடல் இணையதளம். இன்றைய இளைஞர்களிடம் சந்தேகம் ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் கூட ‘கூகுள்’ செய்து பார்ப்போம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு தேடல் என்றாலே அது ‘கூகுள்’ என்றாகிவிட்டது.

பலராலும் அதிகம் பயன்படுத்தப்படும் கூகுள் தேடல் இணையதளத்தில் இந்திய அளவில் இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விஷயம் ‘பாகுபலி 2’ என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘பாகுபலி’ படத்தை ‘கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன்?,” என்ற கேள்வியுடன் முடித்தனர்.

‘பாகுபலி 2’ படம் வெளியான 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதிக்கு முன்பிருந்தே ”கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் ?,” என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அந்த கேள்விதான் கூகுளில் பலரையும் ‘பாகுபலி 2’ படத்தைப் பற்றித் தேட வைத்துள்ளது.

பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி வசூலைக் குவித்த ‘பாகுபலி 2’ படம் கூகுள் தேடலிலும் இந்த ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட விஷயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 2வது இடத்தில் ஐபிஎல் போட்டிகள், 3வது இடத்தில் ‘லைவ் கிரிக்கெட் ஸ்கோர்’, 4வது இடத்தில் ‘தங்கல்’, 5வது இடத்தில் ‘ஹாப் கேர்ள்பிரன்ட்’, 6வது இடத்தில் ‘பத்ரிநாத் கி துல்ஹானியா’, 7வது இடத்தில் ‘முன்னா மைக்கேல்’, 8வது இடத்தில் ‘ஜக்கா ஜாசூஸ்’, 9வது இடத்தில் ‘சாம்பியன்ஸ் டிராபி’, 10வது இடத்தில் ‘ரயீஸ்’ ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

இந்திய அளவில் தேடலில் முதலிடத்தைப் பெற்ற ‘பாகுபலி 2’, உலக அளவிலான மூவி டிரென்டில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. இதற்காக ‘பாகுபலி’ படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.