இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்த ‘சாமி‘ படம் அமோக வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக ‘சாமி’ படத்தின் 2-ம் பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திலும் நடிகர் விக்ரம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

“சாமி-2” படத்தின் படப்பிடிப்பு நெல்லையில் நேற்று தொடங்கியது. நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளிகூடம் முகப்பு வாயிலில் போலீஸ் நிலையம் போல் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் “பி.2 சந்திப்பு போலீஸ் நிலையம்” என்று எழுதப்பட்டு இருந்தது. ஏராளமான வாகனங்கள் சிகப்பு விளக்குடன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. காவல்துறை தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள், விதிமுறைகள் எழுதப்பட்டு இருந்தன,.
பி-2 சந்திப்பு போலீஸ் நிலையம் அருகே நெல்லை சந்திப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் என்று ஒரு போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு போலீஸ் உடையில் ஏராளமானோர் நின்று கொண்டு இருந்தனர்.
நடிகர் விக்ரம் போலீஸ் உடையில் ‘மிடுக்’காக நின்று கொண்டு இருந்தார். அவர் தனக்கு எதிரில் நின்று கொண்டு இருக்கும் போலீசாருக்கு உத்தரவிடுவது போன்ற ஒரு காட்சியை இயக்குனர் ஹரி படமாக்கினார். இந்த படப்பிடிப்பில் நடிகர் இமான் அண்ணாச்சியும் போலீஸ் உடையில் விக்ரமுடன் நின்று கொண்டு இருக்கும் காட்சியும் படம்பிடிக்கப்பட்டது.
படப்பிடிப்பின் இடையே இயக்குனர் ஹரி நிருபர்களிடம் கூறியதாவது:-

போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிகர் விக்ரம் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.
‘சாமி’ படத்தின் பெரும்பாலான காட்சிகள் நெல்லையில் எடுக்கப்பட்டது. நெல்லை மாநகரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘சாமி’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தின் முடிவில் சாமியின் வேட்டை தொடரும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.
அதன்படி 15 ஆண்டுகளுக்கு பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுகிறது. காவல்துறை பற்றிய கதை என்றாலும், மிகவும் வித்தியாசமான முறையில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைய உண்டு.
நெல்லையில் தொடர்ந்து ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறும். அதன்பிறகு அடுத்த மாதம்(பிப்ரவரி) இறுதி வாரத்தில் நெல்லையில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவோம். 50 சதவீத படப்பிடிப்பு நெல்லையில் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த படத்தில் 5 பாடல்கள், 4 சண்டை காட்சிகள், மோட்டார் சைக்கிளில் துரத்தும் சண்டை காட்சிகள் இடம் பெறும். ஒரு பாடல் ஐரோப்பாவில் எடுக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் விக்ரம் படப்பிடிப்பை பள்ளிக்கூடத்தை சுற்றி நின்றும், ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்தும் ஏராளமான ரசிகர்கள் நின்று வேடிக்கை பார்த்தனர். அவர்களை பார்த்து விக்ரம் கையசைத்தார். ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். பின்னர் அவர், ரசிகர்கள் அருகே சென்று பேசினார்.