சமீபத்தில் மலை குகைக்கு சாகச சுற்றுலா சென்ற தாய்லாந்து கால்பந்து விளையாட்டு வீரர்கள் திடீர் மழை வெள்ளத்தால் குகையில் மாட்டிக் கொண்டனர்.

பல நாள் போராட்டத்துக்கு பிறகு அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் படம் ஒன்று தயாராக இருக்கிறது. உரு மற்றும் எழுமின் படத்தை தயாரித்த வி.பி.விஜி, தனது வையம் மீடியா சார்பில் இந்தப் படத்தை தயாரித்து இயக்குகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

தாய்லாந்து குகைக்குள் 17 பேர் மாட்டிக் கொண்டதும், யாருக்கும் தீங்கு இல்லாமல் அவர்கள் மீட்டதும் உலகையே உற்றுப் பார்க்க வைத்தது. இந்த சம்பவம் பல விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது. அதனால் அதை மையமாக வைத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் தயாரகிறது. கதை, தமிழ்நாட்டில் நடப்பது போன்று இருக்கும். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு படமாகிறது. இதற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் படப்பிடிப்பை தொடங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடித்து, 2019 ஏப்ரல் மாதம் பள்ளி விடுமுறையில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.