கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள தீரன் அதிகாரம் ஒன்று வருகிற 17ந் தேதி வெளிவருகிறது. சிறுத்தை படத்திற்கு பிறகு கார்த்தி போலீசாக நடித்துள்ளார். சதுரங்க வேட்டை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார். சமீபத்தில் வெளியான இதன் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படம் குறித்து கார்த்தி கூறியிருப்பதாவது:

நம் எல்லோரும் போலீசை சூப்பர் மேன் போன்றும், வேற்று கிரகத்தில் இருந்து இறங்கி வந்தவர்கள் போன்றும் பார்க்கிறோம். நமது வீட்டில் அண்ணனோ, தம்பியோ அல்லது நண்பர்களோ போலீசாக இருப்பார்கள். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் நம்மில் ஒருவர் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். போலீஸ் அதிகாரிகள் எங்கிருந்து வருகிறார்கள். என்ன மாதிரியான குடும்ப சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள் என்ற விஷயம் தான் அவர்களை ஒரு வகையான போலீஸ் அதிகாரியாக மாற்றுகிறது.

போலீஸ் டிரைனிங்கில் அவர்கள் போலீசாக மாற மட்டும் தான் பயிற்சி அளிக்கிப்படுகிறது. அவர்கள் எப்படிபட்ட போலீசாக இருக்கிறார்கள் என்பது அவர்களுடைய சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. படத்தில் முற்றிலும் உண்மையான ஒரு போலீஸ் அதிகாரியை பார்க்கலாம். வேறு ஒரு கோணத்தில் போலீஸ் அதிகாரிகளை பார்ப்பீர்கள்.

போலீஸ் அதிகாரிகளுக்கு தடங்கல் என்பது கிரிமினல் பக்கத்தில் இருந்து மட்டும் வராது. அதிகாரிகளிடமிருந்து , சமூகத்திடமிருந்து கூட வரும். இதையெல்லாம் தாண்டி தான் ஒவ்வொரு கேஸையும் அதிகாரிகள் கையாள வேண்டியுள்ளது. இதை சொல்லும் போது சாதரணமாக இருக்கும் திரையில் பார்க்கும் போது உங்கள் வியக்கவைக்கும்.

இது 1995-2005 வரைக்கும் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள கதையாகும். அதை ஒரு போலீஸ் அதிகாரியின் வழ்க்கையின் மூலம் கூறியுள்ளோம். நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் தான் மொத்த காவல் துறை நினைக்கிறோம். அது தவறு. நாம் அனைவரும் 8 மணி நேரம் வேலை செய்ய சம்பளம் வாங்குகிறோம். ஆனால் போலீஸ் அதிகாரிகள் ஒரு நாளைக்கு 22மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. நாம் பார்க்கும் ஒரு சில விஷயங்களை மட்டும் வைத்துக்கொண்டு மொத்த காவல்துறையும் இப்படி தான் என்று கூறுவது தவறு. மற்ற மாநில போலீஸ் அதிகாரிகளை விட தமிழ்நாட்டு போலீஸ் அதிகாரிகள் மேல் அனைவருக்கும் பயம் உண்டு.

மற்ற படங்களில் வருவது போல் சத்தமாக பேசுவது போன்ற விஷயங்களை தவிர்த்து நிஜமாகவே போலீஸ் அதிகாரிகள் எப்படி இருப்பார்களோ அப்படியே இந்த படத்தில் இருக்க நான் முயற்சி செய்துள்ளேன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக என்னை காண்பித்துக்கொள்ள பிட்னசையும் , நான் பார்த்த போலீஸ் அதிகாரிகளின் குணாதீசியங்களை, உடல்மொழியையும் பயன்படுத்தியுள்ளோம். ராஜஸ்தான் மாதிரியான ஒரு வெட்டவெளி நிலப்பரப்பில் நாம் ஒளிந்திருந்து எதிரிகளை பிடிக்க முடியாது. மண்ணுக்குள் மறைந்து தான் பிடிக்க முடியும் அதனால் தான் டிரைலரில் அப்படி ஒரு காட்சி இடம்பெற்றது. அது கிராபிக்ஸ் அல்ல நிஜம் தான்.

இவ்வாறு கார்த்தி கூறினார்.