2018ம் ஆண்டின் 8வது மாதத்தின் 15வது நாளில் இன்று இருக்கிறோம். இந்த வார வெள்ளிக்கிழமை, நாளை மறுநாள் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாகும் படங்களையும் சேர்த்தால் 2018ம் ஆண்டின் படங்களின் எண்ணிக்கை 100ஐத் தொட்டுவிடும். இதற்கடுத்த மூன்றரை மாதங்களில் எப்படியும் 100 படங்கள் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரையிலும் வெளிவந்த திரைப்படங்களின் டிரைலர்களில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்ட டிரைலராக விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படம் இருந்தது. ஆனாலும், அந்த டிரைலர்தான் இந்த ஆண்டில் வேறு எந்தப் பட டிரைலரும் புரியாத சாதனையை யு டியூபில் படைத்துக் கொண்டிருக்கிறது. படம் வெளிவருவதற்கு முன்பே அதன் பார்வைகளின் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டில் பெரிய படம் என எதிர்பார்க்கப்பட்ட ‘காலா’ படத்தின் டிரைலர் கூட 1 கோடியே 29 லட்சம் பார்வைகளைத்தான் பெற்றுள்ளது. இதற்கடுத்து ‘டிக் டிக் டிக்’ பட டிரைலர் 96 லட்சம் டிரைலர்களைப் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய வெற்றிப் படங்களான ‘கடைக்குட்டி சிங்கம்’ 38 லட்சம் பார்வைகளையும், ‘இரும்புத் திரை’ 39 லட்சம் பார்வைகளையும் தான் பெற்றுள்ளது. சமீபத்திய வெற்றிப் படமான ‘பியார் பிரேமா காதல்’ டிரைலர் 55 லட்சம் பார்வைகளையும், கமல்ஹாசன் நடித்து வெளிவந்த ‘விஸ்வரூபம் 2’ டிரைலர் 73 லட்சம் பார்வைகளையும் பெற்றுள்ளது. மற்ற சில படங்களிள் டீசர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன, டிரைலர்கள் வெளியாகவில்லை.

மேலே சொல்லப்பட்டுள்ள கணக்கைப் பார்த்து, ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதன் யு டியூப் பார்வைகளிலும், டுவிட்டர் டிரென்டிங்கிலும் இல்லை என்பதை அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் சரி. கதை நன்றாக இருந்தால்தான் ஒரு படம் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. அதைத்தான் ‘கடைக்குட்டி சிங்கம், இரும்புத் திரை’ ஆகிய படங்களின் வெற்றி மீண்டும் புரிய வைத்துள்ளது.