ஆயிரம் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவின் பொக்கிஷம் இசையமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில், ராமசாமி – சின்னத்தாயம்மாள் தம்பதிக்கு மகனாக 1943 ஜூன் 2ல் பிறந்தார். இயற்பெயர் ராசய்யா. 1976ல், அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை, 1,000க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்தி பாடல்களை நோக்கி சென்ற தமிழர்களை, தன் இசையால் மீட்டெடுத்தவர் இளையராஜா என்றால் அது மிகையல்ல.

ஏற்கனவே மத்திய அரசு 2010ம் ஆண்டு இளையராஜாவுக்கு பத்மபூஷண் விருது வழங்கி உள்ள நிலையில், 2018-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு இன்று(ஜன., 25) அறிவித்தது. அதன்படி, இளையராஜாவுக்கு நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, தமிழக அரசின் கலைமாமணி விருது, மத்திய பிரதேச அரசின் லதா மங்கேஷ்கர் விருது, கேரள மாநில அரசின் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர் இளையராஜா.

இதுதவிர, சாகர சங்கமம் – தெலுங்கு, சிந்து பைரவி – தமிழ், ருத்ர வீணை – தெலுங்கு, பழஸிராஜா – மலையாளம், தாரை தப்பட்டை – தமிழ் ஆகிய திரைப்படங்களுக்கு இசை அமைத்ததற்காக, ஐந்து முறை தேசிய விருதுகளையும் பெற்று உள்ளார்.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், விஷால் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் இளையராஜாவுக்கு வாழ்த்துகள் குவிந்தன வண்ணம் உள்ளது.