சித்தூர் ராணி பத்மினி வாழ்க்கை வரலாறை பின்னணியாக கொண்டு தயாரிக்கப்பட்ட பத்மாவத் படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் நேற்று நாடு முழுவதும் திரையிடப்பட்டது

சுமார் 4 ஆயிரம் தியேட்டர்களில் இந்த படம் வெளியாகி உள்ளது. தென் மாநிலங்களில் பிரச்சினை இன்றி திரையான இந்த படம் வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்தது.
ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பீகார் ஆகிய 4 மாநிலங்களில் மட்டும் இந்த படம் நேற்று வெளியாகவில்லை. உத்தரபிரதேசத்தில் பலத்த பாதுகாப்புடன் இந்த படம் இன்று 2-வது நாளாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
மராட்டியத்தில் 475 தியேட்டர்களில் பத்மாவத் வெளியாகி உள்ளது. மும்பையில் மட்டும் 140 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் நேற்று இந்த படத்திற்கு எதிராக ஆங்காங்கே முக்கிய நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்றாலும் இந்த படத்தை பார்க்க ரசிகர்களிடம் ஆர்வம் காணப்பட்டது.
நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் இந்த படத்தை கண்டு களித்துள்ளனர். இன்று பத்மாவத் படத்தை காண வந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
கர்னி சேனா அமைப்பினர் போராட்டம் காரணமாக கணிசமான தியேட்டர்களில் இந்த படத்தை வெளியிட முடியவில்லை. என்றாலும் ரசிகர்களின் ஆதரவு காரணமாக பத்மாவத் படம் வசூலில் சாதனை படைக்க தொடங்கி உள்ளது.
முதல் நாள் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரூ.27.5 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போராட்டங்கள் காரணமாக நேற்று முதல் நாள் ரூ.10 கோடிதான் வசூலாகி இருந்தது. வரும் நாட்களில் இந்த வசூல் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பத்மாவத் தென் இந்தியாவில் உள்ள 5 மாநிலங்களிலும் பிரச்சினையின்றி காணப்பட்டு வருகிறது. தென் இந்தியாவில் 600-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் பத்மாவத் படம் திரையிடப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஏற்பட்டுள்ள சர்ச்சை காரணமாக நிறைய பேர் இதை பார்க்கும் ஆவலில் வருகிறார்கள். எனவே இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட மாநிலங்களில் 4 பெரிய மாநிலங்களில் பத்மாவத் வெளியாகாதது, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு இழப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் நாள் ரூ.15 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அடுத்து வரும் 4 நாட்களுக்கு இதே நிலை நீடித்தால் இழப்பு தொகை ரூ.50 கோடி முதல் ரூ.75 கோடி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



Leave A Comment
You must be logged in to post a comment.