ஹீரோக்கள் தயாரிப்பாளராவது ஒன்றும் புதிதில்லை. அந்த வரிசையில் இப்போது தயாரிப்பாளராகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். தனது பெயரிலேயே சிவகார்த்திகேயன் புரொடக்ஷ்ன் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

 

இந்த நிறுவனத்தின் முதல் படத்தை அவரது நண்பரும், பாடலாசிரியரும், நடிகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு, ரமா ஆகியோருடன் தர்ஷன் என்ற புதுமுகமும் நடிக்கிறார். திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார், கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னை 28, ஆடாம ஜெயிச்ஜோமடா, ஜீவா படங்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து வந்துள்ளது. இது பெண்கள் கிரிக்கெட் பற்றிய கதை. சாதாரண கிராமத்து பெண் கிரிக்கெட் வீராங்கணையாக வர விரும்புவதையும், அவரது ஆசையை அவரது அப்பா நிறைவேற்ற போராடுவதும் தான் கதை. அப்பாவாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை.

படத்தின் பூஜை மற்றும் துவக்க விழா சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான திருச்சி அருகே உள்ள லால்குடியில் நடந்தது. தயாரிப்பாளர் ஆனது ஏன் என்பது குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது:

திரைத்துறைதான் எனக்கு பெயரும், புகழும் கொடுத்தது. இந்த துறைக்கு நான் நிறைய கடமைப்பட்டிருக்கிறேன். சாதிக்கும் கனவில் நாங்கள் சுற்றிய போது எல்லா நிலைகளிலும் என்னுடம் இருந்த, என் நண்பர்களின் கனவையும் புரிந்து கொள்வது என் கடமையாக உணர்கிறேன். அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மிகவும் திறமையானவன் என்பதை ஏற்கனவே நிரூபித்திருக்கிறான். நானும் நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவன் தான் என்பதால் அருண் கதையை என்னிடம் சொன்னபோது என்னால் அந்த கதையை என்னோடு பொருத்தி பார்க்க முடிந்தது.

திறமையான கலைஞர்களின் கலவையான குழுவின் மூலம், சிறப்பான ஒரு படத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன். கதையிலும், உணர்விலும் இந்த படம் மிக பிரமாண்டமாக இருக்கும். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த லால்குடியில் பூஜையுடன் படத்தை துவக்கியுள்ளோம். நான், அருண்ராஜா காமராஜ், இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மூவரும் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள், ஒரே ஊர்காரர்கள். அது தான் முதல் நாள் ஷூட்டிங்கை இங்கு நடத்தியதற்கு முக்கிய காரணம். என்றார் சிவகார்த்திகேயன்.