கருப்பு வெள்ளை காலங்களில் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த நடிகை சாவித்திரி. அதிலும் குறிப்பாக அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களின் மூலம் பெண் ரசிகைகளிடையே முதன்மையான நடிகையாக விளங்கினார்.

சாவித்ரியின் நடிப்பைப் பற்றிப் பேச ‘பாச மலர்’ படம் ஒன்றே போதும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் பல படங்களில் நடித்து தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர்.
அவருடைய வாழ்க்கை வரலாறு ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் தமிழிலும், ‘மகாநதி’ என்ற பெயரில் தெலுங்கிலும் உருவாகியுள்ளது. இப்படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அவர்தான் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்றதும் அதிர்ச்சியடைந்தவர்கள் பலர். சாவித்ரியின் தோற்றத்திற்கும், அவருடைய நடிப்பிற்கும் கீர்த்தி சுரேஷ் எப்படி ஈடு கொடுத்து நடிப்பார் என்றார்கள்.
ஆனால், இப்படத்தின் 50 வினாடி டீசர் ஒன்றே கீர்த்தி சுரேஷின் நடிப்பைப் பற்றிப் பேசி ஆச்சரியப்படுத்தி விட்டது. அப்படியே சாவித்ரி போன்றே டீசரில் உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவருடைய முகத் தோற்றம், உடல் மொழி அத்தனையையும் அப்படியே பிரதிபலித்திருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.
பயோகிராபி படங்களில் ‘நடிகையர் திலகம்’ படம் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டார்கள்.



Leave A Comment
You must be logged in to post a comment.