தமிழ் சினிமாவில் சமீப காலமாக த்ரில்லர் வகைப் படங்கள் தான் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த மாதிரியான வருவது தான் சிறப்பு.

இல்லையென்றால், ‘இருட்டு அறை’ பக்கம் ‘முரட்டு குத்து’ பார்க்க நம் இளைஞர்கள் அதிகம் ஒதுங்கி விடுவார்கள். பலத்த எதிர்ப்புகளுக்கிடையிலும் இந்த மாதிரி படங்கள் வசூல் செய்து வருவதால், தரமான படங்கள் வருவது குறைந்துவிடும்.

விஷால், சமந்தா நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படமும், அருள்நிதி, மகிமா நம்பியார் நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படமும் த்ரில்லர் படங்கள். ‘இரும்புத்திரை’ படம் மூலம் பி.எஸ்.மித்ரன், ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படம் மூலம் மு.மாறன் இருவரும் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள். இருவருமே அவர்களது படங்களை த்ரில்லர் படங்களாக உருவாக்கியிருக்கிறார்கள்.

மே 11ம் தேதி வெளியாகும் இந்தப் படங்களுக்கிடையில் தான் போட்டி அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘நடிகையர் திலகம்’ படம் பயோகிராபியாகவும், ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ சென்டிமென்ட் கதையாகவும் உருவாகியுள்ளதால் அந்தப் படங்களால் இந்தப் படங்களுக்கு எந்த போட்டியும் வரப் போவதில்லை.

விஷால் இதற்கு முன் நடித்த ‘துப்பறிவாளன்’ படமும் த்ரில்லர் ஆக அமைந்தது. அருள்நிதி இதுவரையில் நடித்த படங்களில் த்ரில்லர் படமான ‘மௌனகுரு’ படம்தான் அவருக்கு பேர் சொல்லும் படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.