ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் வரவேற்பைப் பார்த்து திரையுலகம் கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறது. சினிமாவையும், அரசியலையும் சேர்த்து ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தால் அரசியல் ஆசை நடிகர்களின் கதி என்ன என்று அவர்கள் யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘காலா’ படத்திற்கு ஏற்பட்ட நிலைமை அடுத்து ‘விஸ்வரூபம் 2’ படத்திற்கு வருமா என்றும் சந்தேகம் வருவது இயற்கைதான்.

 

 

‘காலா’ படத்தை அவுட்ரேட் ஆக வாங்க யாரும் முன்வராததில் இருந்தே அந்தப் படத்திற்கான வியாபாரம் எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ளலாம். இதன் பாதிப்பு அடுத்து வெளிவர உள்ள ரஜினிகாந்த் படத்திலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘2.0’ படம் ஆகஸ்ட் மாதமாவது வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாமல் இன்னும் தாமதம் ஆகிக் கொண்டே இருப்பதால், படத்தின் வெளியீடு எப்படியும் அடுத்த வருடத்திற்கு தள்ளிப் போகும் என்கிறார்கள்.

உலக தரத்திலான படத்தைக் கொடுக்கவே இயக்குனர் ஷங்கர் விரும்புவதால், கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஆங்கிலப் படங்களுக்கு இணையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டாராம். மேலும் காலதாமதம் ஆவதால் படத்தின் பட்ஜெட் இன்னும் 100 கோடி அதிகமாகவும் வாய்ப்புள்ளதாம். அதனால் படத்தின் பட்ஜெட் 400 கோடியிலிருந்து 500 கோடிக்கு உயர்ந்துவிடுமாம்.

அனைத்தையும் சிக்கலில்லாமல் முடித்துவிட்டு படத்தை 2019 பொங்கலுக்கு வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல்.