சிவகார்த்திகேயன் – பொன்ராம் கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகி உள்ள படம் சீமராஜா. சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்டி ராஜா தயாரித்திருக்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சீமராஜா படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் ஆகஸ்ட் 3-ம் தேதி நடத்துகிறார் ராஜா.

மதுரை, தமிழ்த் திரையுலகின் இதய துடிப்பாக விளங்கும் நகரம். இங்குள்ள ரசிகர்கள் சினிமாவுக்கு அளிக்கும் அன்பும், ஆதரவும் நம்ப முடியாதது. நாங்கள் படத்தை ஆரம்பிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் தான் நடத்துவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்.

இந்த படத்தின் மையக்கதை, தமிழ்நாட்டின் தெற்கு பகுதியின் கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டது. அதனால் இசை விழா நிகழ்ச்சியை மதுரையில் நடத்த, மனப்பூர்வமாக முடிவு செய்தோம்.

ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் பெரும் எண்ணிக்கையில் இந்த விழாவில் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவார்கள் என உறுதியாக நம்புகிறேன் என தயாரிப்பாளர் ராஜா கூறியிருக்கிறார்.

முன்னதாக வருகிற ஜூலை 25-ம் தேதி வாரேன் வாரேன் சீமாராஜா என்ற ஒற்றை பாடலை ரிலீஸ் செய்கின்றனர். செப்., 13-ம் தேதி படம் ரிலீஸாகிறது.