காஞ்சீவரம் நடராசர் அண்ணாதுரை (C. N. Annadurai, 15 செப்டம்பர், 1909 – 3 பிப்ரவரி, 1969) இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவர் என்ற பெருமையுடன், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவர் என்ற பெருமையும் கொண்டவர்.

 

பேச்சாற்றல்

தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாகச் சொற்பொழிவாற்றவும் எழுதவும் வல்லவர். இவர் பல முற்போக்கு, சீர்திருத்த நாடகங்களையும் எழுதியிருக்கிறார். அவற்றுள் சிலவற்றை இயக்கி இருக்கிறார்; சிலவற்றுள் நடித்திருக்கிறார். தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதியவரும் தன்னுடைய திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை அதன் மூலம் முதன்முதலாக பரப்பியவரும் இவரே. நடுத்தரவர்க்க நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவரான அண்ணாதுரை, தன் ஆரம்பகால வாழ்க்கையை பள்ளி ஆசிரியராகத் துவங்கியவர், சென்னை இராசதானியில் (மெட்ராஸ் பிரசிடென்சி) தன் அரசியல் ஈடுபாட்டினை முதன்முதலில் பத்திரிகையாளராக, பத்திரிகையாசிரியராக வெளிப்படுத்தினார்.

மொழிப்புலமை

ஒரு தடவை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிகசிப்பதற்காக அவரிடம் ஏனென்றால் என்ற வார்த்தை மூன்று தடவை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா என்று கேட்டனர். அதற்கு அவர், எந்தத்தொடரிலும் இறுதியில் வராச்சொல் ‘ஏனென்றால்’. ஏனென்றால், ‘ஏனென்றால்’ என்பது இணைப்புச்சொல் என்று உடனே பதிலளித்தார்.

பெரியார் உடனான தொடர்புகள்

அதன்பின் பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நீதிக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் பெரியாருடன் திராவிடக் கழகத்தில் இணைந்து, மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவுக் கருத்துக்களையும், சமூக சீர்திருத்தக் கருத்துக்களையும் பரப்புவதில் முன்னின்று ஈடுபட்டார்.பெரியாரின் தனித்திராவிடநாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளையவரான மணியம்மையாரை பெரியார் மணம் புரிந்துகொண்டமையினால் கருத்துவேறுபாடு கொண்டு, திராவிடக் கழகத்தின் முக்கிய உறுப்பினர் பலருடன், 1949ல், பெரியாரை விட்டு விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) என்ற புதிய இயக்கமொன்றை நிறுவினார். தனிக்கட்சி துவங்கினாலும் தன்கட்சி கொள்கைகள் தாய்க்கட்சியான திரவிடக்கட்சியை ஒத்தே செயல்பட்டது. இந்தியாவின் தேசிய அரசியலில் பங்குகொள்ளும் விதமாக இந்தியக் குடியரசானதிற்குப் பின் இந்திய சீனப் போருக்குப்பின் 1963 இல் தனது தனித்திராவிட நாடுக் கொள்கையை கைவிட்டார்.

ஆளும் காங்கிரசுக் கட்சிக்கெதிராக பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலகட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்கலானார். இறுதியில் 1965 இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் மிகத்தீவிரமாக ஈடுபடலானார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களாதரவை அவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிமிதமாக பெற்றன.

தமிழ்நாடு பெயர் மாற்றம்

1967 இல் நடைபெற்றத் தேர்தலில் பங்கு பெற்ற திமு கழகம் வெற்றி பெற்று முதன் முறையாக திராவிட ஆட்சியை தமிழகத்தில் அமைத்தது. அவரது தலைமையில் 1967 மார்ச் 6ல் அமைந்த அமைச்சரவை இளைஞர்களை கொண்ட அமைச்சரவையாக விளங்கியது. ஆட்சி பொறுப்பை ஏற்றதும் சுயமரியாதைத் திருமணங்களை சட்டபூர்வமாக்கி தனது திராவிடப் பற்றை உறுதிபடுத்தினார். இரு மொழி சட்டங்களை (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உருவாக்கி முந்தைய அரசின் மும்மொழித்திட்டத்தினை (தமிழ், இந்தி, ஆங்கிலம்) முடக்கினார், மேலும் மதராஸ் மாநிலம் என்றிருந்த சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றி தமிழக வரலாற்றில் நீங்கா இடம் பெற்றார்.

இறுதிக்காலம்

மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியிலிருக்க அவரால் முடிந்தது. புற்று நோய்க்கு ஆளான அவர், 2-3 பிப்ரவரி 1969 ல் காலமானார். அவரின் இறுதி ஊர்வலம் கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுகின்ற அளவில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். பல கல்வி நிறுவனங்கள், கட்சிகள் அவரின் பெயரில் துவக்கப்பட்டன.

ஒரு முதலமைச்சராக மட்டுமன்றி, ஒரு அறிஞராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும், மிகச் சிறந்த பேச்சாளராகவும், மக்கள் தலைவனாகவும், இன்றும் தமிழக மக்களால் அவர் நினைவு கூறப்படுகிறார். திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி துவக்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் அவரின் பெயரைக்கொண்டு உருவாக்கிய அண்ணாத் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியினால் பெற்ற வெற்றியைக் கொண்டு தமிழகத்தின் ஆட்சியை பின்னாளில் நடத்தினார் என்பது வரலாறு.