முன்னாள் முதல்வரும், நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கையை பலரும் திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே ஜெயலலிதாவின் வாழ்க்கை அம்மா என்ற பெயரில் கன்னடத்தில் எடுக்கப்பட்டு, அந்தப் படம் நீதிமன்ற வழக்கின் காரணமாக வெளிவராமல் இருக்கிறது.

 

இந்த நிலையில் அவரது கதையை படமாக இயக்கப்போவதாக இயக்குனர் பாரதிராஜாவும், ஏ.எல்.விஜய்யும் கூறினர். இதற்கிடையில் ஜெயலலிதா கதையை யார் படமாக்கினாலும் நீதிமன்றத்தின் மூலம் படத்தை நிறுத்துவேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவித்துள்ளார்.

இது இப்படி இருக்க இயக்குனர் பிரியதர்ஷினி, ஜெயலிதாவின் வாழ்க்கை படமாக்கபோவதாக அறிவித்தே விட்டார். படத்துக்கு தி அயர்ன் லேடி என்று தலைப்பு வைத்துள்ளார். ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவாக நடிக்க பலரை முடிவு செய்து அணுகினோம். பலர் நடிக்க தயங்கினார்கள். ஜெயலலிதாவின் சாயலும், குணநலனும் ஒத்திருப்பவர் நித்யா மேனன். அவரிடம் கதை சொன்னோம். பிடித்திருந்து ஒப்புக் கொண்டார். விரைவில் மேக்அப் டெஸ்ட் நடக்க இருக்கிறது. சசிகலா கேரக்டரில் நடிக்க வரலட்சுமியை பேசி வருகிறோம். அவர் இன்னும் தனது ஒப்புதலை தெரிவிக்கவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ந் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் அன்று படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.