சங்க காலத் தமிழ் இலக்கியங்கள் எதுவும் புனைவு இல்லை.. இந்த மண்ணில் வாழ்ந்த ஆதி தமிழர்களின் வாழ்வியல்தான் சங்க இலக்கியங்கள் என்பதை சரித்திர சாட்சிகளோடு கம்பீரமாக வெளிப்படுத்தி நிற்கிறது கீழடி.
சங்க இலக்கியம் என்பது கிமு 3-ம் நூற்றாண்டு தொடங்கி கிபி 3-ம் நூற்றாண்டு வரை என்கிற வரையறை உண்டு. அதையெல்லாம் தகர்த்து கிமு 6-ம் ஆண்டு வரை நகர்த்திச் சென்றிருக்கிறது கீழடி ஆய்வு முடிவுகள்.
கங்கை நதிக்கரையில் நகர நாகரிகம் என்பது தோற்றம் பெற்ற காலம் கிமு 3-ம் நூற்றாண்டு. ஆனால் தமிழர்கள் அந்த கிமு 3-ம் நூற்றாண்டில் நகர நாகரிகத்தின் உச்சகட்ட வாழ்வியலை வாழ்ந்தவர்கள் என்பதை கீழடியின் ஒவ்வொரு தடமும் திசையெங்கும் குவிந்து கிடக்கும் ஓராயிரம் சான்றுகள் பெருமிதத்துடன் பதிவு செய்திருக்கின்றன. கீழடியின் அகழாய்வு முடிவுகளை “கீழடி..வைகை நதிக்கரையில் சங்க கால நகர நாகரிகம்” என்ற தலைப்பில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆய்வு அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது. கீழடி ஆய்வு முடிவுகள் எப்படியெல்லாம் தொழில்நுட்ப ரீதியாக விஞ்ஞானப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டன என்பதை உலகுக்கு பிரகடனம் செய்யும் பேராவணம் அது.
Leave A Comment
You must be logged in to post a comment.