சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், ‘சிவாஜி’ கணேசன்‘ என்று மேடையில் அழைத்தார்.

Sivaji ganesan Birthday

தமிழ் திரையுலகில் நடிப்புக்கு இலக்கணம் வகுத்து எல்லோராலும் நடிகர் திலகம் என போற்றப்படுபவர் சிவாஜி கணேசன்.

கோலிவுட்டில் இன்றும் கோடம்பாக்கத்தை நோக்கி நடிப்பு கனவுகளோடு படையெடுக்கும் பலருக்கும் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் இருப்பவர் சிவாஜி கணேசன். 1928ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தஞ்சாவூரில் கணேசனாக பிறந்த இவர், இளம் வயது முதலே நடிப்பின் பால் ஈர்க்கப்பட்டு மேடை நாடகங்களில் எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்கத் தொடங்கினார்.

ஒருமுறை “சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்” என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த இவரது நடிப்புத்திறனை பார்த்து வியந்த தந்தை பெரியார், ‘சிவாஜி’ கணேசன்’ என்று மேடையில் அழைத்தார். அன்று பெரியார் உச்சரித்த அந்த பெயர் பின்னாளில் தமிழ் திரையுலக சரித்திரத்தில் ஒரு நீங்கா அத்தியாயம் ஆகிவிட்டது.

1952ம் ஆண்டு கருணாநிதியின் திரைக்கதை, வசனத்தில் உருவான பராசக்தி படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார் சிவாஜி. சமூக பார்வை கொண்ட நீண்ட மற்றும் ஆழமான வசனங்களும் சிவாஜியின் ஒப்பற்ற நடிப்பும் ஒரே படத்தில் இவருக்கு மாபெரும் கலைஞன் எனும் அந்தஸ்தை பெற்றுத் தந்தது.

சிவாஜி கணேசனின் முகம் மட்டுமல்லாது கை, கால் ஏன் நகம் கூட நடிக்கும் என்று சொல்லும் அளவு தமிழில் நடிப்புக்கென்று புது இலக்கணத்தை வகுத்தார். திரையில் சிவாஜி ஏற்று நடிக்காத வேடங்களே இல்லை எனலாம். அதனாலேயே காலப்போக்கில் நடிப்புச் சக்ரவர்த்தி என்றும் நடிகர் திலகம் என்றும் எல்லோராலும் அழைக்கப்பட்டார்.

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி, பகத்சிங், திருப்பூர் குமரன், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயரை உச்சரிக்கும்போதே நம் நினைவு திரையில் தோன்றும் முகம் இவருடையதாகவே இருக்கும். தன் வாழ்நாளின் இறுதிக்காலத்தில் தேவர் மகன், படையப்பா, ஒன்ஸ் மோர் என குணச்சித்திர வேடங்களிலும் அதே வசீகரத்தோடு நடித்து வந்தார்.

செவாலியர் பட்டம் பெற்ற முதல் இந்தியர் சிவாஜி கணேசன். அதோடு கலைமாமணி விருது, பத்ம விருதுகள், தாதாசாகெப் பால்கே விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரான இவர், நடிப்பு எனும் கலையின் மூலம் ஒவ்வொரு கலைஞர்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்.