இளைஞர்களுக்கான இசையைக் கொடுத்ததன் மூலம், வெகுவிரைவில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் அனிருத். அதனால்தான் தமிழகத்தின் ‘ராக் ஸ்டார்’ என அவரைக் குறிப்பிடுகின்றனர்.

Aniruth Birthday

அனிருத்… ‘கொலவெறி’ என்ற ஒற்றைப் பாட்டின் மூலம் உலகத்தையே ஆடவும், பாடவும் வைத்தவர். அப்போது அவருக்கு வயது 21. நாமெல்லாம் அந்த வயதில் கல்லூரி முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்கலாமா இல்லை வேலைக்குப் போகலாமா என்று முடிவெடுக்கக் கூட முடியாமல் திணறிக் கொண்டிருந்திருப்போம்.

அனிருத்துக்கு இன்று 26 வயது முடிந்து 27 வயது தொடங்குகிறது. இவருடைய அப்பா ரவி ராகவேந்திரா, ‘ஆனந்தக் கண்ணீர்’, ‘படையப்பா’, ‘வானம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களிலும், பல சீரியல்களிலும் நடித்தவர். அம்மா லட்சுமி, பரதநாட்டியக் கலைஞர்.

21 வயதில் இசையமைப்பாளர் ஆனாலும், 10 வயதிலேயே பள்ளியில் உள்ள ‘Zinx’ என்ற இசைக்குழுவில் இடம்பிடித்தார். பள்ளிப் படிப்பை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவனிலும், கல்லூரிப் படிப்பை லயோலாவிலும் முடித்தார். பியானோ வாசிப்பதில் வல்லவரான அனிருத், லண்டனில் உள்ள டிரினிடி காலேஜ் ஆஃப் மியூஸிக்கில் கிளாஸிக்கல் பியானோ கற்றவர். அதுமட்டுமின்றி, கர்நாடக இசையையும் முறைப்படி கற்றிருக்கிறார்.

ரஜினி மற்றும் ஒய்.ஜி.மகேந்திராவுக்கு நெருங்கிய உறவினரான அனிருத், ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில், ரஜினியின் மருமகனான தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே நன்றாக இருந்தாலும், ‘கொலவெறி’ பாடல்தான் பட்டிதொட்டி முதல் ஃபாரீன் வரை அவரைக் கொண்டு சேர்த்தது. இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போடாதவர்களும், இந்தப் பாட்டைப் பாடாதவர்களும் மிகக் குறைவு. இன்றைக்கும் இந்தப் பாடல் எல்லோராலும் விரும்பப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு இசையமைத்த அனிருத், ‘டேவிட்’ படத்தில் இடம்பெற்ற ‘கனவே கனவே கலைவதேனோ…’ என்ற ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைத்தார். படம் தோல்வி அடைந்தாலும், இன்றளவும் விரும்பிக் கேட்கும் பாடலாக இது இருக்கிறது.

இசையமைப்பாளராகி 7 வருடத்தில், மொத்தம் 19 படங்களுக்கு இசையமைத்து விட்டார் அனிருத். அதில், 16 படங்கள் ரிலீஸாகிவிட்டன. ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘வேலைக்காரன்’ போன்ற படங்கள் விரைவில் ரிலீஸாக இருக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, விக்ரம் என எல்லாருக்குமே இசையமைத்திருக்கிறார் என்பது, அவரது திறமைக்கு கிடைத்த பரிசு. இதில், தனுஷுக்கு 4 படங்களும், சிவகார்த்திகேயனுக்கு 5 படங்களும் இசையமைத்துள்ளார். படங்களுக்கு மட்டுமின்றி, இண்டிபெண்டண்ட் ஆல்பமும் செய்துள்ளார்.

சிறந்த இசையமைப்பாளர், மிகச்சிறந்த பாடகராகவும் இருக்க முடியும் என்பதற்கு அனிருத் உதாரணம். இதுவரை 46 பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பாடியிருக்கிறார். பொதுவாக, தாங்கள் இசையமைக்கும் படங்களில் இசையமைப்பாளர்கள் பாடுவது வழக்கம். ஆனால், தன்னுடைய படம் மட்டுமின்றி, பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்பவர் அனிருத்.

இளைஞர்களுக்கான இசையைக் கொடுத்ததன் மூலம், வெகுவிரைவில் எல்லோர் மனதிலும் இடம்பிடித்தவர் அனிருத். அதனால்தான் தமிழகத்தின் ‘ராக் ஸ்டார்’ என அவரைக் குறிப்பிடுகின்றனர். அவருக்குள், ஹீரோவாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அதனால்தான், சில பாடல்களில் தோன்றி வருகிறார்.

‘ஊதுங்கடா சங்கு’, ‘வாட் எ கருவாடு’, ‘ஓப்பன் த டாஸ்மாக்’, ‘ஆலுமா டோலுமா’ என ரசிகர்களை உட்காரவிடாமல் ஆட்டம் போடவைத்த பல பாடல்களை உருவாக்கியவர், பாடியவர். டி.இமானின் இசையில் ‘டண்டணக்கா’, ‘டமாலு டுமீலு’ என ஆட்டம் போடவைத்தவர்தான், ‘யாஞ்சி யாஞ்சி’ என உருகவும் வைத்தார். தற்போது ‘கருத்தவன்லாம் கலீஜா…’வைத்தான் தமிழ்நாடே முணுமுணுத்தபடி டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறது.

அனிருத்தைப் பற்றி அவ்வளவு கிசுகிசுக்கள் வந்துள்ளன. அனிருத் – ஆன்ட்ரியா லிப் கிஸ், அனிருத் – சிம்பு பீப் சாங், சுச்சி லீக்ஸ் என அனிருத்தின் வாழ்க்கையிலும் சில கறுப்புப் பக்கங்கள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஒரு பிட்டு வீடியோவில் இருப்பது கூட அனிருத் தான் என்று வதந்தி பரவியது.

அதுமட்டுமல்ல, சென்னையில் உள்ள ஒரு பிரபல நகைக்கடை அதிபரின் மகளுக்கும், அனிருத்துக்கும் திருமணம் நிச்சயம் ஆகிவிட்டதாகவும், அடுத்த வருடம் திருமணம் என்று கூட செய்திகள் வெளிவந்தன. ஆனால், அது உண்மையில்லை என்று பின்னர் தெரியவந்தது.

தனுஷின் உறவினரான அனிருத், ‘3’ படத்துக்கு இசையமைத்தபோது சிவகார்த்திகேயனுடன் பழகினார். தனுஷ், சிவகார்த்திகேயன், அனிருத் மூன்று பேரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். இடையில் தனுஷுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் முட்டிக்கொள்ள, உறவினரை விட்டுவிட்டு நண்பனாக சிவகார்த்திகேயன் பக்கம் வந்துவிட்டார் அனிருத். இதனால், ‘விஐபி’, ‘மாரி’ படங்களின் இரண்டாம் பாகத்தில் அனிருத் இசையை ரொம்பவே மிஸ் செய்கிறார்கள் தனுஷ் ரசிகர்கள்.

சிம்புவுக்கும், அனிருத்துக்குமான நட்பு, அலாதியானது. பீப் சாங் பிரச்னை வந்தபோது கூட இருவரும் பிரியவில்லை. சிம்பு முதன்முறையாக இசையமைத்துள்ள ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் அனிருத்.

அதுமட்டுமல்ல, அந்தப் படத்தின் மாஸ்டரிங், லண்டனில் நடந்திருக்கிறது. அப்போது சிம்புவுக்கு கடுமையான காய்ச்சல். அவரால் இங்கிருந்து லண்டன் செல்ல முடியவில்லை. அங்கிருந்த அனிருத்துக்கு விஷயம் தெரியவர, சிம்புவுக்குப் பதில் அவர் சென்று மாஸ்டரிங் முடியும்வரை இருந்து நண்பனுக்கு உதவி செய்திருக்கிறார்.

மாறும் காலச் சூழலுக்கு ஏற்ப, இசையும் வெவ்வேறு வடிவத்திற்கு மாறிக்கொண்டே இருக்கிறது. ரசிகர்களின் மனதறிந்து இசையமைப்பது என்பது எல்லோருக்கும் வாய்த்துவிடாது. அனிருத்துக்கு அது வாய்த்திருப்பது என்பது எல்லோருக்குமான பாக்கியம்.