கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி, சென்னை மெரினா பீச்சில் பெரிய அளவிலான போராட்டம் நடந்தது.
மாணவர்களும், இளைஞர்களும் இதில் பெருமளவில் கலந்து கொண்டனர். உலகம் முழுவதும் இந்த போராட்டம் பரவியது. தற்போது இந்த போராட்டத்தை மையமாக கொண்டு மெரீனா புரட்சி என்ற படம் தயராகி உள்ளது.
நாச்சியார் பிலிம்ஸ் சார்பில் எம்.எஸ்.ராஜ் தயாரித்து, இயக்குகிறார். ராஜ்மோகன், நவீன், ஸ்ருதி என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அல்ரூபியான் இசை அமைக்கிறார். படத்தை பற்றி இயக்குனர் எம்.எஸ்.ராஜ் கூறியதாவது:
மெரினா போராட்டத்துக்கு பின்னால் மிகப்பெரிய அரசியலும், சதியும் இருக்கிறது. அந்த ரகசியங்களை வெளிக்கொண்டு வரும் படம். மெரினா போராட்டத்தில் லட்சக்ககணக்கில் மக்கள் கலந்து கொண்டாலும் அந்தப் போராட்டத்தை வழி நடத்தியது 18 இளைஞர்கள் தான். அவர்கள் யார் என்பதை இந்தப்படம் காட்டும். போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகர், நடிகைகள், தலைவர்களின் பங்கு என்ன? அவர்களின் பின்னணி என்ன, கடைசி நேரத்தில் வன்முறை வெடித்தது ஏன் என்கிற பல கேள்விகளுக்கு படத்தில் விடை இருக்கிறது.
பத்திரிகையாளர்கள் இருவர் இந்த போராட்டம் பற்றி துப்பறிவது போன்ற திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடித்திருக்கிறார்கள். போராட்டம் நடந்தபோதே அதை படப்பிடிப்பும் செய்து கொண்டோம். படம் நிச்சயம் பரபப்பை ஏற்படுத்தும் என்கிறார் எம்.எஸ்.ராஜ்.
Leave A Comment
You must be logged in to post a comment.