படம் எடுப்பதைவிட படத்துக்கு தலைப்பு வைப்பதுதான் இப்போது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. பல நாட்கள் மண்டையை பிய்த்துக்கொண்டு ஒரு தலைப்பை யோசித்து வைத்தால், படம் வெளியாகும்போது இது என்னுடைய டைட்டடில் என்று பஞ்சாயத்தைக் கூட்டிவிடுகிறார்கள்.

எதற்கு இப்படிப்பட்ட வம்பு என்று நினைத்தோ என்னவோ, வெறும் நம்பர்களை படத்தின் தலைப்பாக வைக்கத் தொடங்கியுள்ளனர். ஏற்கனவே சூர்யா நடித்த ஒரு படத்துக்கு 24 என்று பெயர் வைத்தனர். ஷங்கர் இயக்கும் படத்துக்கு 2.0 என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ’96’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் ஒன்றுக்கு ‘100’ என்று பெயர் வைத்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் டி.ஆர்.பாலா இயக்கத்தில் சச்சின் மணி நடிக்கும் ஒரு படத்துக்கு ’46’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்போது பரத் நடிக்கும் ஒரு படத்துக்கு ‘8’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த விஜய் கவின்ராஜ் இயக்குகிறார்.

இந்த படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சூரி நடிக்க, கதாநாயகியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். விளம்பர மாடலான பூஜா ஜாவேரி இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்!