சமுத்திரகனி இயக்கி, நடித்த தொண்டன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அர்த்தனா. தற்போது, அவர் நடித்துள்ள செம படம் நாளை வெளிவருகிறது. இதுதவிர, கடைக்குட்டி சிங்கம், வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் படங்களில் நடித்து வருகிறார். இவை அனைத்திலுமே அவர், கிராமத்து பெண்ணாகவே நடிக்கிறார். அதுவே எனது ஆசை என்கிறார் அர்த்தனா. இதுபற்றி அவர் கூறியதாவது:

இயக்குனர் வள்ளிகாந்த், கதை சொன்ன விதமும், என்னுடைய மகிழினி கதாபாத்திரத்தை அவர் உருவாக்கியிருந்ததும் என்னை மிகவும் கவர்ந்தது. தென் தமிழக பின்னணியில், ஒரு பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மகிழினி, அவள் பெயருக்கேற்றார்போல உண்மையானவள், நம் வாழ்வில் எங்கேயாவது அவளை போன்ற ஒருவரை கடந்து வந்திருப்போம். அந்த கதாபாத்திரத்தில் என்னை பொருத்திக் கொள்ள உதவியாக இருந்த இயக்குனருக்கு நன்றி.
கார்த்தி ஜோடியாக கடைக்குட்டி சிங்கம், விக்ராந்த் ஜோடியாக வெண்ணிலா கபடி குழு 2, படங்களிலும் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்ததால், கிராமத்து பெண்கள் போல தாவணி உடை அணிய வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன். தொடர்ந்து அப்படியான கேரக்டர் கிடைப்பதில் மகிழ்ச்சியே.
தமிழ்நாட்டு ரசிகர்களின் செல்லக்குட்டியாக இருக்கவே விரும்புகிறேன். என்னுடைய திரை வாழ்வை செம தொடங்கி வைத்திருக்கிறது. திரையரங்குகளில் ரசிகர்களோடு அமர்ந்து படத்தை பார்க்க ஆவலோடு இருக்கிறேன். இந்த படங்களுக்கு பிறகு நகரத்து பெண் கதாபாத்திரங்களிலும் நடித்து அதிலும் என்னை நிரூபிப்பேன் என்றார் அர்த்தனா.



Leave A Comment
You must be logged in to post a comment.