நமது அண்டை நாடான இலங்கையில் திரைப்படங்கள் மிக குறைந்த அளவிலேயே தயாராகிறது. அபூர்வமாக சில படங்கள் இலங்கையை தாண்டியும் பேசப்படும்.

அப்படியான ஒரு படம் இப்போது தயாராகி உள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு முன்பே ஆயுதம் ஏந்தி இலங்கை அரசுக்கு எதிராக போராடிய சிங்கள இயக்கம் ஜே.வி.பி. இதன் தலைவர் ரோகண விஜய வீர. பின்னர் இந்த இயக்கம் ஆயுதத்தை கீழே போட்டுவிட்டு ஜனநாயக பாதைக்கு திரும்பியது. பின்னர் மீண்டும் ஆயுதம் ஏந்தி போராடியது.

இலங்கை அரசு இரும்புகரம் கொண்டு இந்த இயக்கத்தை அழித்தது. ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தலைவர் ரோகண விஜய வீர அதன்பிறகு என்ன ஆனார் என்பது இன்றுவரை மர்மமாகவே உள்ளது. இலங்கையின் சேகுவேரா என்று அவரை இலங்கை இளைஞர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது வாழ்க்கையை மையமாக கொண்டு தி புரோஸன் பயர் என்ற படம் தயாராகி உள்ளது. அனுருத்த ஜெயசிங்கே இயக்கி உள்ளார். சிங்கள முன்னணி நடிகர் கமல் ஹத்தர ஆராச்சி ரோகண விஜய வீர கேரக்டரில் நடித்துள்ளர். இலங்கையின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் 2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு செல்லும் முதல் சிங்களப் படம் இது.