பிரணப் குமார் முகர்ஜி
இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார். முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 – 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
Leave A Comment
You must be logged in to post a comment.