கிறிஸ்துமஸ்

கிறித்து பிறப்புப் பெருவிழா அல்லது கிறிஸ்துமஸ் (Christmas) ஆண்டு தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழா கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறித்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது. இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறித்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழியாக வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

கிறித்துமசு இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தின் பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறித்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.