நடிகர் அஜித் மீதிருக்கும் ஈர்ப்பால் தனது குழந்தைகளுக்கு அஜித் பெயரை சூட்டியுள்ள ரசிகர் ஒருவர், அதே பெயரில் பிறப்பு சான்றிதழும் வாங்கி பள்ளியில் சேர்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர் மன்றங்களை கலைத்த பின்னரும் கூட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அஜித்தின் பிறந்த நாள், படம் வெளியாகும் முதல்நாள் உள்ளிட்ட அஜித்தின் ஒவ்வொரு நகர்வையும் தங்களுக்கான கொண்டாட்டமாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இதுதவிர அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் அவரது படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியானாலும் அதை ட்ரெண்டாக்கி மகிழ்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அவரது ரசிகர்கள்.
இந்நிலையில் மதுரை ஜீவா நகரை சேரந்த மதுரை வீரன் என்ற அஜித் ரசிகர் தன்னுடைய மகனுக்கு தல அஜித் என்ற பெயரிட்டு, அதே பெயரில் மாநகராட்சியில் பிறப்பு சான்றிதழ் வாங்கி பள்ளியில் சேர்த்துள்ளார்.
இதை ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து மதுரை வீரன் மனைவி ஜோதிலட்சுமி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
அதில், “எங்களது குடும்பம் மொத்தமுமே அஜித்தின் தீவிர ரசிகர்கள் தான். எங்களுக்கு முதல் குழந்தை பிறந்தபோது அதற்கு அஜிதா என்று பெயர் சூட்டினோம். இரண்டாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு தல அஜித் என்று பெயர் சூட்டினோம். அதேபெயரிலேயே மாநகராட்சியில் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் வாங்கி அருகிலிருக்கும் பள்ளியில் சேர்த்துள்ளோம். நடிகர் அஜித்தை எங்களது குடும்பத்தில் ஒருவராகவே நினைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Leave A Comment
You must be logged in to post a comment.