‘வடசென்னை’ படத்தைத் தொடர்ந்து தனுஷுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி துவங்கியது.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். பொல்லாதவன், மயக்கம் என்ன, ஆடுகளம் படங்களைத் தொடர்ந்து தனுஷின் அசுரன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் ‘அசுரன்’ படத்தில் நடிகர் தனுஷ், அப்பா, மகன் என்று இரண்டு தோற்றங்களில் நடித்து வருகிறார். படத்தில் பசுபதி, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கென், பவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகியுள்ள நிலையில் இரண்டாவது லுக்கை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். அதில் விரைவில் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்தப் படம் அக்டோபர் 4-ம் தேதி திரைக்கு வரவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Comment
You must be logged in to post a comment.