மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிரி ராவ் ஹைதரி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

இப்படத்தின் நான்கு தோற்றங்களை இன்று மாலை 5 முணி முதல் வெளியிட உள்ளார்கள். படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களின் முதல் பார்வையாக அவை வெளியாக உள்ளன. அனேகமாக, சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி ஆகிய ஹீரோக்களின் பார்வைகளாக அவை இருக்கலாம்.

தமிழ் சினிமாவில் ‘மல்டி ஸ்டார்’ படங்கள் அதிகம் வருவதில்லை. ஒரு சில இரண்டு ஹீரோ படங்கள் தான் வந்துள்ளன. இந்தப் படத்தில் முக்கியமான, வித்தியாசமான மூன்று ஹீரோக்கள் இருப்பதாலும், மேலும் சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட சிலர் மணிரத்னம் படத்தில் முதல் முறையாக நடிப்பதாலும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நிறையவே எதிர்பார்ப்பு உள்ளது.

அதோடு, மணிரத்னத்தின் முந்தைய படமான ‘காற்று வெளியிடை’ படத்தை அவருடைய ரசிகர்களே மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இன்றைய ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் பார்வைகள் நிச்சயம் பரவசத்தை ஏற்படுத்தும் என நம்பலாம்.