நயன்தாரா என்ற பெயரைக் கேட்டாலே திரையுலகத்தில் உள்ள ஹீரோக்கள் கூட திரும்பிப் பார்க்கும் போது, ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்க மாட்டார்களா என்ன?. வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரங்களில் இருந்து விலகி தனக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்த பிறகு நயன்தாரா அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க ஆரம்பித்தார்.

“மாயா, நானும் ரௌடிதான், இது நம்ம ஆளு, திருநாள், இருமுகன், காஷ்மோரா, டோரா, அறம், வேலைக்காரன்,’ என கடந்த மூன்று வருடங்களில் நயன்தாரா நடித்த இந்தப் படங்கள் அவரை வெவ்வேறு கதாபாத்திரங்களில் வித்தியாசமாகக் காட்டின. அந்தப் பயணம் தற்போதும் தொடர்ந்து வருகிறது. அடுத்து ‘இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா, விசுவாசம், சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம், கொலையுதிர் காலம்’ என அந்த வித்தியாசம் நீள்கிறது.

இதில் நேற்று வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் டிரைலரைப் பார்த்த பிறகு நிச்சயம் படம் வேற மாதிரி என சொல்லத் தோன்றுகிறது. தோற்றத்தில் கொஞ்சம் ‘நானும் ரௌடிதான்’ காதம்பரியை ஞாபகப்படுத்தினாலும் நயன்தாரா டிரைலரில் ‘கெத்தாக’ இருக்கிறார்.

25 கோடி மதிப்பு போதைப் பொருளை நயன்தாரா அவருடைய அம்மா சரண்யா, அப்பா ஆர்.எஸ்.சிவாஜி, தங்கை ஜாக்குலின் ஆகியோருடன் சேர்ந்து கடத்துவது தான் படத்தின் கதையாக இருக்குமோ என யோசிக்க வைக்கிறது. யோகி பாபு, ராஜேந்திரன் என காமெடிக்கும் குறைவில்லை.

புதிய இயக்குனர் நெல்சன் இந்த ‘கோ கோ’வை வித்தியாசமாகக் கொடுத்து ‘வா வா’ என ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைத்துவிடுவார் போலிருக்கிறது.