விஜய் நடித்த வேலாயுதம், ஜில்லா மற்றும் புலி ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் TR.பாலா. 25க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இவர், தற்போது 46 என்கிற படத்தின் மூலம் இயக்குநராகி இருக்கிறார்.

காத்திருப்போர் பட்டியலில் நடித்த சச்சின் மணி மற்றும் பீச்சாங்கை ஹீரோ கார்த்திக் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். புதுமுகங்களான மீனாட்சி, நவினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க, முக்கிய வேடங்களில் கலக்கப்போவது யாரு புகழ் குரேஷி, கியான், தயாரிப்பாளர் தேனப்பன் மற்றும் சண்டக்கோழி-2வில் நடித்துள்ள பிரின்ஸ் ஆகியோர் வில்லன்களாக நடிக்கின்றனர்.

சென்னையில் ஞாயிறு தோறும் இரவு நேரங்களில் நடைபெறும் இல்லீகல் பைக் ரேஸ் பற்றிய கதை தான் இந்தப்படம். இதில் பந்தயம், சூதாட்டம் என மிகப்பெரிய அளவில் பணம் புழங்குகிறது. இதுபற்றி தீவிரமான ஒரு ஆய்வு மேற்கொண்டு, இது ஏன் நடக்கிறது, இதன் பின்னால் யார் இருக்கிறார்கள் என விரிவாகவும், அதேசமயம் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கி வருகிறார்கள்.

“இந்த பைக் ரேஸ் காட்சி தரூபமாக வரவேண்டும் என்பதற்காக பெசண்ட் நகர் பீச்சில் சுமார் 50 பைக் ரேஸர்களை வரவழைத்து, நிஜமான டிராபிக்கை உருவாக்கி, அதில் மிகவும் பரபரப்பாக படப்பிடிப்பை நடத்தினோம். இதற்காக தெலுங்கு திரையுலகில் இருந்து ஹைடெக்கான தொழில்நுட்ப உபகரணங்களை வரவழைத்து படப்பிடிப்பை நடத்தினோம். குறிப்பாக இந்த ரேஸில் குழந்தை ஒன்று விபத்தில் சிக்கும் காட்சியை மிகத் தத்ரூபமாக எடுத்துள்ளோம்” என்கிறார் இயக்குநர் TR.பாலா.