இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள் நோன்பிருப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. மனித ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மீக ஈர்ப்பு இதுதான் நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கமாகும். பிற நாட்களைவிட நோன்பு இருக்கும் காலத்தில்தான் மனிதன் இறைவனுக்கு நெருங்கி வருகிறான்.
இஸ்லாமியர்களுக்குரிய 12 மாதங்களில் 9 வது மாதமான ரமலான் மாதம் மிகவும் நன்மைக்குரியதாகும். இதில் இஸ்லாமிய மார்க்க வழிகாட்டி திருக்குர்ஆன்.இந்த மாதத்தில் இறைவன் நோன்பு நோற்பதைக் கட்டாயமாக்கியுள்ளார். 14 மணி நேரம் பசித்திருந்து, விழித்திருந்து, ஒவ்வொருவரும் தன்னை புடம்போட்டு தூய்மைப்படுத்தி, அதன் மூலம் மனித சமுதாயத்துக்குப் பல்வேறு நன்மைகளை வழங்குகிறார்கள்.
கடமையை நிறைவேற்றும்போது மட்டும் பசி, தாகம் போன்றவற்றால் உடல் ரீதியாக சிரமம் ஏற்படும். அந்த சிரமத்தை சகித்து இறைவனுக்காக நோன்பு வைப்பதால் அந்த குணம் இறைவனுக்கு பிடித்துப்போகிறது.
விடியற்காலை 4 மணிக்கு சாப்பிட்டு, நோன்பை ஆரம்பிப்பார்கள். சூரிய உதயத்துக்கு முன்பாகவே காலை 5 மணிக்கு நோன்பு தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு, அதாவது மாலை 6 மணிக்கு பிறகு நோன்பை முடித்துக்கொள்வார்கள். நோன்பு முடிப்பதற்கு ‘இப்தார்’ என பெயர்.
நோன்பு வைக்க இயலாதவர்கள் யார் என்பது பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மாதவிலக்கு உடையவர்கள், பயணத்தில் இருப்போர் ஆகியோர் நோன்பு இருக்க வேண்டியதில்லை. வயதானவர்கள், குணமடையா நோய்வாய்ப்பட்டவர்கள்நோன்புக்கு பதிலாக, 30 நாள் உணவுக்கு செலவான தொகையை தர்மமாக தரலாம்.
ரம்ஜான் மாத கடைசி நாளில் பிறை பார்த்து மறுநாள் ஈகைப் பெருநாள் கொண்டாடப்படும். ‘ஈதுல் பித்ர்’ என அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவும் பண்பையும், பாரபட்சமற்ற அன்பையும், சகோதரத்துவத்தையும் அனைவரது மனத்திலும் விதைத்திடும் நோக்கிலேயே உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது.
30 நாட்கள் நோன்பு முடிந்து, ‘ஈகைத் திருநாள்’ பண்டிகை இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். புதுத்துணி உடுத்துவது, வகை வகையான உணவுகள் சமைப்பது, ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்வது, நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திப்பது, மற்ற மதத்தை சேர்ந்த நண்பர்களை வீட்டுக்கு அழைத்து ரம்ஜான் விருந்து உபசரிப்பது என இஸ்லாமியர்கள் மிக உற்சாகமாக கொண்டாடடும் பண்டிகை ‘ரம்ஜான்’. வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில், கடைசி நோன்பின் இரவு ‘Chaand Raat – நிலவின் இரவு’ எனும் பெயரில் மிகப்பெரிய பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது.
ரம்ஜான் பண்டிகை அன்று, நாடு முழுக்க இருக்கும் இஸ்லாமியர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு பணமாகவோ, இனிப்புகளாகவோ, பரிசுப் பொருட்களாகவோ கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வழக்கம். பிரியாணி, சேமியா, பாயாசம், கபாப், ஹலீம் என நாவில் நீர் சொட்டவைக்கும் உணவு வகைகள் இந்திய விருந்துகளில் நிரம்பி கிடக்கும்.
இந்த சிறப்பு மிக்க நாளில் உங்களது இஸ்லாமிய சகோதர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துக்களை குக்கூ இணையதள வானொலி உடன் இணைந்து சொல்லுங்கள். வாழ்த்து செய்திகளை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
Leave A Comment
You must be logged in to post a comment.