இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் காளி. இப்படத்தை கதை. வசனம் எழுதி கிருத்திகா உதயநிதி இயக்கி உள்ளார்.

விஜய் ஆண்டனியுடன் அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத், பிரகாஷ் பிருத்வி நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார், ரிச்சர்ட் எம்.நான் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார். எல்லா பணிகளும் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
படத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வில்லியம் அலெக்சாண்டர் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விஜய் ஆண்டனி நடித்த அண்ணாத்துரை படத்தை வாங்கி, வெளியிட்டதில், எனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதையடுத்து, காளி படத்தை குறைந்த விலைக்கு எனக்கு தருவதாக விஜய் ஆண்டனியும், காளி படத்தை தயாரிக்கும் அவரது மனைவி பாத்திமாவும் உத்தரவாதம் அளித்தனர். நானும் ரூ.50 லட்சம் முன்தொகை கொடுத்து, அவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன்.
தற்போது திரையுலக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது. இதனால், புதிய படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால், என்னால் பாக்கித் தொகையை கொடுக்க முடியவில்லை. இதையடுத்து காளி படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி எனக்கு நோட்டீசு அனுப்பியுள்ளார். எனவே, காளி படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது. அதோடு தயாரிப்பாளர் பாத்திமா, விஜய் ஆண்டனி ஆகியோர் 4.75 கோடியை 11-ந் தேதிக்குள் கோர்ட்டில் டெபாசிட் செய்தால், திட்டமிட்டப்படி படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டது.



Leave A Comment
You must be logged in to post a comment.