சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படம் கனா. இதனை பாடலாசிரிரும், பாடகருமான அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஆண்டனி ரூபன் இசை அமைக்கிறார்.

இது பெண்கள் கிரிக்கெட் பற்றிய படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஒரு இளம்பெண் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கிறாள். அவளது கனவை நிறைவேற்ற அவளது ஏழை தந்தை போராடுகிறார். அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். தந்தையாக சத்யராஜும், மகளாக ஐஸ்வர்யா ராஜேசும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் நடிப்பதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ், 3 மாதங்கள் முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெற்று நடித்தார்.

பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடர்பான காட்சிகள் சென்னையிலும் மற்ற காட்சிகள் திருச்சியை சுற்றிலும் படமாக்கப்பட்டது. கடந்த மே மாதம் சிவகார்த்திகேயனின் சொந்த ஊரான லால்குடியில் தொடங்கிய படப்பிடிப்பு நேற்றுடன் முடிந்தது. படக்குழுவினரை சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்தினார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்குகிறது. தீபாவளியையொட்டி படத்தை திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள்.