தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், கவர்னர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி:

நாட்டின் பெரும் தலைவர்களுள் ஒருவர் கருணாநிதி. சிறந்த சிந்தனையாளர், எழுத்தாளர், மக்கள் விரும்பும் தலைவராக திகழ்ந்தவர். அவரது மறைவை கேட்டு துயரத்தில் ஆழ்ந்தேன்.

ஜனாதிபதி தமிழில் இரங்கல்:

நம் வாழ்வில் வல்லமை மிக்க மரபினை விட்டு சென்றிருக்கிறார் கருணாநிதி. அவரது மறைவு அறிந்து வேதனை அடைந்தேன்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு:

இந்தியாவின் மிக மூத்த அரசியல் ஆளுமையான கருணாநிதியின் மறைவால் துயரம் அடைந்தேன்.

காங்., தலைவர் ராகுல்:

தமிழக அரசியலில் 60 ஆண்டுகால ஆதிக்க சக்தியாக விளங்கியவர் கருணாநிதி. சிறந்த மகனை நாடு இழந்துவிட்டது.

முதல்வர் பழனிசாமி:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பாகும்.

நடிகர் ரஜினிகாந்த்:

என்னுடைய கலைஞர் மறைந்த இந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத கருப்பு நாள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

ராமதாஸ் (பா.ம.க.,):

அன்பு நண்பர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மறைவு பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும், துயரத்தையும் அளிக்கிறது. கலைஞரின் மறைவு தமிழக அரசியலுக்கும், கலை உலகுக்கும் உண்மையாகவே ஈடு செய்ய முடியாத இழப்பு. கண்ணீருடன் நான்.

மம்தா பானர்ஜி(மேற்கு வங்க முதல்வர்):

இந்தியா தனது மகனை இழந்து விட்டது.

அன்புமணி ராமதாஸ்:

தமிழக அடையாளங்களாக உள்ள கட்டுமானங்கள் அனைத்துக்கும் கருணாநிதியே காரணம்.

பொன்.ராதாகிருஷ்ணன்:

கருணாநிதியின் வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

ராஜ்நாத்சிங் (உள்துறை அமைச்சர்):

கருணாநிதியின் மறைவுக்கு நாடே துக்கம் அனுசரிக்கிறது.

மன்மோகன் சிங்:

தமிழர்களுக்காக ஓய்வின்றி உழைத்தவர். தேசிய அளவிகல் இவரது பங்களிப்பை யாராலும் மறக்க இயலாது.

அமெரிக்க தூதர் கென் ஜெஷ்னர் இரங்கல்:

அமெரிக்க தமிழகத்துக்கும், இந்தியாவுக்கும் கருணாநிதி ஆற்றிய சேவைகள் நினைவு கூரப்படும்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

இந்திய அரசியல்வாதிகளில் தலைசிறந்தவர் கருணாநிதி. அவரது பங்களிப்பு அரசியலோடு மட்டும் நின்றுவிடவில்லை.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:

இந்த யுகத்தின் ஈடு இணையில்லா ஒப்பற்ற தலைவர் கருணாநிதி. அவர் காலமான செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். தமிழுக்கு ஆற்றிய தொண்டு, பழகும் தன்மை, நட்புணர்வு, ஐந்து முறை முதல்வராக இருந்த வரலாறு, அவரது நினைவுகள் காலத்தால் அழியாதது.

திருமாவளவன் (வி.சி):

சமூக நீதியை காக்க தனது கடைசி மூச்சு வரை போராடியவர் கருணாநிதி.

அத்வானி இரங்கல் :

திமுக தலைவர் கருணாநிதி மறைவிற்கு பா.ஜ. மூத்த தலைவர் அத்வானி இரங்கல் தெரிவித்துள்ளார்.

ப.சிதம்பரம்:

கருணாநிதியின் மறைவு சகாப்தத்தின் முடிவு. இந்தியாவுக்கும், தமிழக மக்களுக்கும் பேரிழப்பு.