சாதாரணமாக, ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுகள் கட்டுகிறார்கள். அந்த அணைக்கட்டுகளின் உயரம் 50 அடியில் இருந்து 200 அடி வரை இருக்கும். அது தேக்கிவைக்கும் நீரின் கொள்ளளவு (Storage Capacity) சுமார் 5 டி.எம்.சி.-யில் இருந்து 100 டி.எம்.சி.- வரை இருக்கும்.
தடுப்பணை(check dam) என்பதும், பெரிய அணைக்கட்டுகளைப் போல ஆற்றின் குறுக்கே கட்டப்படுவதுதான். ஆனால், இதில் வேறுபாடுகள் உண்டு. ஆற்றின் படுகை இருக்குமே (River Bed) அதற்கு மேலே 3 அடியில் இருந்து 6 அடிவரைதான் ஒரு தடுப்பணையின் உயரம் இருக்கும். அது தேக்கிவைக்கக்கூடிய நீரின் கொள்ளளவு, ஒரு டி.எம்.சி., முக்கால் டி.எம்.சி., அரை டி.எம்.சி. போன்ற அளவுகளில்தான் இருக்கும்.
மழைக்காலங்களில் ஓடிவரக்கூடிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீரைச் செறிவூட்ட இந்தத் தடுப்பணைகள் உதவும். கூடுதலாக வரும் தண்ணீர் வழிந்துவிடும். தடுப்பணையில் தனியாகத் திறந்துவிடுவதற்கு எந்த அமைப்பும் கிடையாது. அது வழிந்துவிடக் கூடியதுதான். ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தண்ணீர் நிற்கும். எல்லா தண்ணீரும் கடலுக்கு ஓடாது. நிலத்தடி நீர் கூடுவதோடு, கோடைக்காலங்களில் ஆடு மாடுகள் தண்ணீர் குடிப்பதற்கும் வசதியாக இருக்கும். தடுப்பணை கட்டுவதற்கான செலவும் குறைவு.
நீர் சூழ் உலகு!
‘நீரின்றி அமையாது உலகு’ என்றார் வள்ளுவர். நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்த நம் முன்னோர், அதைப் பல்வேறு வகைகளில் சேமித்தனர். அந்த சேமிப்பு இடங்களுக்கு, பல பெயர்களைச் சூட்டினர். அவர்கள் நீரைச் சேமித்த முறைகள், பாதுகாத்த வகைகள் கீழே:
நீர் தேங்கும் இடங்களும் அதன் பெயர்களும்:
- தானே உருவான நீர்நிலைகள்: ‘சுனை, பொய்கை, ஊற்று’
- மழைநீரைச் சேகரிக்கும் சிறிய பகுதி: ‘குட்டை’
- குளிப்பதற்குப் பயன்படுவது: ‘குளங்கள்’; ‘செறு’ என்பது குளத்தைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்
- குடிக்கப் பயன்படும் நீர்: ‘ஊருணி, கிணறு’
- உழவுத் தொழிலுக்குப் பயன்படும் நீர்: ‘ஏரி’
- மழை நீர் மட்டும் தேங்கி நிற்கும் நீர்நிலை: ‘ஏந்தல்’
கூவ நூல்:
கிணறு தோண்டுவது பற்றிக் குறிப்பிடும் நூல் ஒன்று, பழங்காலத்தில் இருந்துள்ளது. அதற்கு ‘கூவ நூல்’ என்று பெயர். எந்த இடத்தில் கிணறு வெட்டினால் தண்ணீர் கிடைக்கும் என்பது போன்ற சாஸ்திரங்களை உள்ளடக்கிய நூல் இது. இதே போன்றதொரு நூல், வடமொழியில், ‘கூப சாத்திரம்’ என்ற பெயரில் இருந்துள்ளது.
‘கூவல் குறைவின்றித் தொட்டான் மிகுபுகழ்
பெறுவான்’ என்கிறது திரிகடுகம் (16-3).
நீர் ஆதாரமான கிணற்றைத் தோண்டி வைத்தவர், இறந்தும் இறவாப் புகழைப் பெறுவர் என்று இந்நூல் கூறுகிறது.
வாய்க்கால்:
ஆறு, அணை, குளம், ஏரி, ஏந்தல், வாய்க்கால், கிணறு ஆகிய நீர்நிலைகள் இருந்துள்ளன. நீர்த்தேக்கங்களிலிருந்து குமிழி, தூம்பு, மடை, மதகு, கண், வாய், துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைந்தது. வாய் என்பது மதகு. நீர் பாய்ந்தோடுவது, ‘கால்’. வாயிலிருந்து செல்லும் நீர் ஆகையால் அதற்கு ‘வாய்க்கால்’ என பெயர் வந்தது.
மழைப் பொழிவை அளக்கலாம் வாங்க:
வானிலைச் செய்திகள் கேட்டிருப்பீர்கள். அதில், ‘இன்று எட்டு மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது’ என்று சொல்வதையும் கவனித்திருப்பீர்கள். ‘தண்ணீர் என்பது திரவம். அதை லிட்டர் அளவில்தானே குறிப்பிட வேண்டும்? ஏன் மீட்டர் அளவில் சொல்கிறார்கள்?’ என்று யோசித்திருக்கிறீர்களா? அப்புறம் ‘மழையை எப்படி அளக்கிறார்கள்?’ என்கிற சந்தேகமும் உங்களுக்குத் தோன்றியிருக்கிறதா?
வானிலை ஆராய்ச்சி மையங்களில் Rain gauge என்று ஒரு கருவி இருக்கும். நாம் அதை மழைமானி என்று சொல்வோம். அதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, ‘இத்தனை மி.மீ. மழை பெய்தது’ என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள். ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம்.
இது கொஞ்சமாகப் பெய்யும் மழையை அளந்து பார்க்க உதவும். பாட்டில் நிரம்பி வழியும் அளவுக்கு மழை பெய்தால் என்ன செய்வது என்று கேட்பீர்களா? அப்படியானால், வானிலை ஆராய்ச்சி மையம் சொல்வதை, செய்திகளில் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
நீங்களே விளையாட்டாக ஒரு மழைமானியைச் செய்து, மழையை அளந்து பார்க்கலாம்.
1. ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பாட்டிலின் அடிப்பாக விட்டம் என்ன அளவு என்று பாருங்கள். அதே அளவு விட்டத்தை வாயாகக் கொண்ட புனல் (funnel) ஒன்றை எடுங்கள். புனலை பாட்டிலின் மேலே பொருத்தி வையுங்கள்.
2. இதை வெட்டவெளியான ஓரிடத்தில் பெய்யும் மழை நீர் தடை இல்லாமல் விழும்படியாக வையுங்கள். உங்கள் வீட்டு மொட்டை மாடி வசதியாக இருக்கலாம். மழை பெய்யும்போது மழைமானி அசையக் கூடாது. கீழே விழுந்துவிடக் கூடாது. அப்படி வைக்க வேண்டும்.
3. 24 மணிநேர கால அளவு வரை மழை நீர் மழைமானியில் விழும்படி இருக்கட்டும். அதன் பிறகு, அடிக்குச்சியால் (Scale) மழைமானியில் விழுந்த நீரின் அளவை அளக்கவும். எத்தனை மில்லி மீட்டர் இருக்கிறதோ அதுவே அந்தப் பகுதியில் பெய்த மழையின் அளவு.
Leave A Comment
You must be logged in to post a comment.