மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்று முதல் 12 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. 19ஆம் தேதி கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.
தமிழ்நாட்டில் புகழ்பெற்ற திருவிழாக்களில் முக்கியமானது மதுரையில் நடைபெறும் சித்திரைத்திருவிழா. ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமியை முன்னிட்டு மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. தினந்தோறும் மீனாட்சி அம்மனும் சுந்தரேஸ்வரரும் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி மாசி வீதியை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்ரல்15ஆம் தேதி இரவு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும், 16ஆம் தேதி மீனாட்சி அம்மன் திக்விஜயமும் நடைபெற உள்ளது.
மதுரையின் பிரம்மாண்ட திருவிழா
ஏப்ரல் 8, கொடியேற்றம் கற்பக விருக்ஷ் வாகனம், சிம்ம வாகனம், ஏப்ரல் 9ஆம் பூத, அன்ன வாகனம். ஏப்ரல் 10 கைலாச பர்வதம், காமதேனு வாகனம், ஏப்ரல் 11 ஆம் தங்கப்பல்லாக்கு, ஏப்ரல் 12ல் வேடர் பறிலீலை, தங்கக் குதிரை வாகனம், ஏப்ரல் 13ல் ரிஷப வாகனம், ஏப்ரல் 14 நந்திகேஷ்வரர், யாழி வாகனத்தில் அம்மனும் அப்பனும் வலம் வருகின்றனர்.
மீனாட்சிக்கு வைர கிரீடம்
மீனாட்சி திருக்கல்யாண வைபவத்துக்கு முதல் நாள், திக்விஜயம் செய்து தேசம் முழுவதையும் தன்னுடைய ஆட்சிக்கு உட்படுத்திய இளவரசி மீனாட்சியை, மதுரையின் அரசியாக முடிசூட்டி பட்டாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். சித்திரைத் திருவிழாவின் 8வது நாளான்று காலையில் விசேஷ அபிஷேகம், பூஜைகள் முடிந்த பிறகு, பட்டாபிஷேகம் நடைபெறும் பந்தலுக்கு மீனாட்சி அம்மன் எழுந்தருளுவார். அன்னைக்கு முடி சூட்டுவதற்காக ‘ராயர் கிரீடம்’ எனப்படும் வைரக் கிரீடம் அனுக்ஞை விநாயகர் சந்நிதியிலிருந்து கொண்டுவரப்படும். உடன் செங்கோலும் கொண்டு வரப்படும்.
மீனாட்சி அம்மன் திக் விஜயம்
வரும் 15ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் 8.24க்குள் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும். 16ஆம் தேதி திக்கு விஜயம் நடைபெறும்.
அன்றைய தினம் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளும் மீனாட்சி அம்மனுக்கு பரிவட்டம் கட்டி, கிரீடம் சூட்டி, செங்கோலும் வழங்கப்படும். பின்னர் மீனாட்சிக்கு உரிய வேப்பம்பூ மாலையும் மகிழம்பூ மாலையும் அணிவிக்கப்படும். பட்டாபிஷேக வைபவம் நிறைவு பெற்ற பிறகு, நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.
சித்திரைத் தேரோட்டம்
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்ரல் 17 ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் யானை வாகனத்திலும் புஷ்ப பல்லாக்கிலும் மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பவனி வருவதைக் காண கண்கோடி வேண்டும். 18ஆம் தேதி, மீனாட்சி, பிரியாவிடை சமேதராக சுந்தரேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் ஏறி நான்கு மாட வீதிகளிலும் வலம் வருவார்.
ஆன்லைன் முன்பதிவு
திருக்கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக கட்டணமில்லா தரிசன முறையில் 3,200 பேருக்கு அனுமதி வழங்கப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்கள் ரூ.200, ரூ.500 கட்டணத்தில் கோயில் இணையதளம் மூலம் இன்று (ஏப்.8) முதல் 12-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்.
கள்ளழகர் கோவில்
மதுரை கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தக்கால் நடும் கொட்டகை முகூர்த்த விழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலமுமான மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் சித்திரை திருவிழா மிக முக்கியமானதாகும்.
முகூர்த்தக்கால் விழா
கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாக முகூர்த்தகால் ஊன்றும் கொட்டகை முகூர்த்த விழா கள்ளழகர் திருக்கோவிலின் உபகோவிலான மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் திருக்கோவிலில் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.
சித்திரை திருவிழா தொடக்கம்
ஆயிரம் பொன் சப்பரத்தில் பொருத்தப்படும் யாழி முகத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதற்காக அழகர்கோவிலில் உள்ள நூபுரகங்கையில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்கிட முகூர்த்தகால் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கோயில் நுழைவு வாயிலில் முகூர்த்த கால் நடப்பட்டது. கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழாவின் துவக்க நிகழ்சியாக முகூர்த்தகால் நடப்பட்டதை தொடர்ந்து, கள்ளழகர் மதுரை வரும் போது எழுந்தருளும் அனைத்து மண்டகப்படிகளிலும் இன்று முகூர்த்தகால் நடப்பட்டது.
ஆயிரம் பொன் சப்பரம்
அழகர்மலையில் இருந்து வைகையில் இறங்குவதற்காக ஏப்ரல் 17ஆம் தேதி கண்டாக்கி சேலை கட்டி கையில் வேல் கம்புடன் தங்கப்பல்லாக்கில் புறப்படுவார் அழகர். அவரை பக்தர்கள் மூன்று மாவடியில் எதிர்கொண்டு வரவேற்பார்கள். ஏப்ரல் 19ஆம் தேதியன்று வைகையாற்றில் கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அன்றைய தினம் இரவு வண்டியூரில் ஆயிரம் பொன் சப்பரத்தில் காட்சியளிப்பார்.
விடிய விடிய திருவிழா
அழகர் மதுரைக்கு வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக ஏப்ரல் 20ஆம் தேதி மாண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்து அவரது சாபத்தை நீக்குகிறார். இரவு விடிய விடிய தசாவதாரக்காட்சி நடைபெறுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி புஷ்ப பல்லாக்கில் ஏறி மலைக்கு திரும்புகிறார் அழகர். 22ஆம் தேதி அழகர் மலைக்கு சென்றடைகிறார். ஏப்ரல் 8ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரைக்கும் மதுரையில் தினந்தோறும் திருவிழாக்கோலம்தான்.
Good info, Thanks