சென்னை : 8மணி நேர வேலை.8 மணி நேர மன மகிழ்வு… 8 மணி நேர உறக்கம்.. இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம்.

உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.

காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான,கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்…பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.

உழைத்துக் களைத்த மனிதனுக்கு சிறப்பு தந்து அவன் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளான உழைப்பாளர் தினத்தை இப்படியாக ஒவ்வொரு தேசமும் வெவ்வேறு நாட்களில், வெவ்வேறு பெயர்களில் கொண்டாடுகின்றன.

 

ஐரோப்பாவில் : மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகாலத்தில் நெருப்பின் தினமாக மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது.

ரோமானியர்கள் : ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான ஃப்லோராவிற்கான வழிபாடாக கொண்டாடப்பட்டது. ஏப்ரல் 28 முதல் மே 2 முடிய நடக்கும்.

கனடா : பெர்முடா, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொழிலாளர் தினத்தை செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கள் கிழமையில் கொண்டாடுகின்றன.

இந்தியா : இந்தியா மே 1, 1927 இல் இருந்து தொழிலாளர் வாரத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியது. இது பல்வேறு தொழிலாளர் அமைப்புகளால் கொண்டுவரப்பட்ட ஊர்வலங்களுடன்I பொது விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.

ஹவாயில் : ஹவாயில் மே தினம், லீ என்ற மரபு வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. லீ என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.

ஜெர்மனியில் : ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

சீனாவில் : 1999 இல், தொழிலாளர் தின விடுமுறையானது 1 நாளில் இருந்து 3 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. சீன அரசாங்கம் இந்த 3 நாட்களுக்கு முன்னதான மற்றும் வரவிருக்கின்ற வாரயிறுதிகளை ஒன்றிணைத்ததன் மூலமாக 7 நாள் விடுமுறையாக உருவாக்கியது. தொழிலாளர் தின விடுமுறையானது சீனாவில் பொன்விழா வாரங்கள் மூன்றில் ஒன்றாக இருந்தது, இது மில்லியனுக்கும் மேற்பட்ட சீன மக்களை இந்த காலகட்டத்தில் பயணிக்க அனுமதிக்கின்றது.

போலந்து : போலந்தில் மே 1 தேசிய விடுமுறை நாளாக இருக்கின்ற வேளையில், அது தொழிலாளர் நாள் என்பதிலிருந்து எளிமையாக “மாநில விடுமுறை நாள்” என்று 1990 இல் மறுபெயரிடப்பட்டது.

இத்தாலி : ஸ்வீடன், நார்வே, இத்தாலி முதலிய நாடுகள் மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்படுகிறது. அக்டோபர் முதல் திங்கட்கிழமை ஆஸ்திரேலிய தலைநகரிலும், தெற்கு ஆஸ்திரேலியாவிலும் கொண்டாடப்படுகிறது. மார்ச் முதல் திங்கட்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவிலும், வடக்கு ஆஸ்திரேலியாவில் மே முதல் திங்கட்கிழமையும் கொண்டாடப்படுகிறது. முன்னாட்களில் ‘எட்டு மணி நேர நாள்’ என அழைக்கப்பட்ட மார்ச் இரண்டாவது திங்கட்கிழமை, பின்னாளில் உழைப்பாளர் தினமாக விக்டோரியா மற்றும் டாஸ்மானியாவில் கொண்டாடப்படுகிறது.

ரஷ்யாவில் : சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணிவகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

நியூசிலாந்து : நியூசிலாந்தில் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமானவர் சாமுவேல் பார்னெல்ஸ் என்னும் தச்சு வேலை செய்பவர். அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக அறிவித்தது.