நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

 

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர் நடிகை ஸ்ரீதேவி மரணம் அடைந்தார் என்ற செய்தி அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்திய திரைவானில் தனது ஆளுமையை பல வருடங்களாக நிலை நாட்டியவர். தனது நான்காம் வயதில் துணைவன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழி திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து 13 வயதில் மூன்று முடிச்சு படத்தின் மூலமாக கதாநாயகியானார்.

ஜெய்சங்கர், சிவகுமார்,ரவிக்குமார், ரஜினி, கமல் மற்றும் மலையாளம், தெலுங்கு, கன்னட முன்னணி நடிகர்களின் கதாநாயகியாகவும் உலா வந்தார். ஹிந்தி திரை பிரவேசம் அவரை இந்திய திரைப்பட ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக குடியேற்றி உலகப்புகழ் தேடி தந்து. 1997 -ல் தற்காலிகமாக நடிப்பை நிறுத்தியவர் 2012-ல் இங்கிலீஷ் விங்க்ளீஷ் படத்தில் நடித்து மீண்டும் நடிப்பை தொடர்ந்து தனது ஆளுமை செலுத்தினார்.

2013-ல் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் அளித்து கவுரவித்தது. தனி மனித வாழ்கையில் சோதனைகள் தாய் தந்தையரின் இழப்பு என்ற இன்னல்களையும் வேதனைகளயும் தாண்டி மன உறுதியாலும் உழைப்பாலும் உச்சநட்சத்திர நாயகியாக திகழ்ந்து தனக்கு பின்னால் வந்த நடிகைகளுக்கு மார்கதர்சியானவர் ஸ்ரீதேவி.

மாபெரும் கலைஞரான அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும், இந்திய திரைப்பட துறைக்கும் ஈடு செய்ய இயலாத இழப்பாகும். அவரது பிரிவால் துக்கத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு நடிகர் சங்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் கண்ணீர் அஞ்சலியையும் செலுத்துவதோடு அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.