மதுரை: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தனது காலில் விழுந்து வணங்கியதை மறக்க முடியாது என மதுரை சின்னப்பிள்ளை குரல் தழு தழுக்க தெரிவித்துள்ளார்.

சின்னப்பிள்ளை மதுரை மாவட்டம், அழகர் கோவில் சாலையில் உள்ள கள்ளந்திரி கிராமத்தில் பிறந்து, மதுரையிலிருந்து பன்னிரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பில்லுச்சேரி கிராமத்தில் வசித்து வருகிறார்.

கிராமப்புற மகளிரிடையே சிறுசேமிப்பு பழக்கம் ஏற்படுத்தி, களஞ்சியம் எனும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார நிலையை மேம்படுத்திக் காட்டினார் சின்னப்பிள்ளை.

விருது வழங்கிய வாஜ்பாய்:

இதற்காக கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ம் தேதி மத்திய சமூக மற்றும் பெண்கள் நலத்துறையின் சார்பாக நடைபெற்ற விருது விழாவில், ஸ்த்ரீ ஷக்தி புரஷ்கார் விருதினை மாதா ஜிஜாபாய் பெயரால் மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் சின்னப்பிள்ளை அன்றைய பிரதமர் வாஜ்பாய் கைகளால் பெற்றார்.

விருது வழங்கிய வாஜ்பாய்:

இந்நிலையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இயற்கை எய்தியுள்ளார். இதுகுறித்து வேதனை தெரிவித்துள்ள மதுரை சின்னபிள்ளை என் சேவைக்கு அங்கீகாரம் அளித்து சக்தி புரஸ்கார் விருது வழங்கியவர் வாஜ்பாய்.

காலில் விழுந்தார் வாஜ்பாய்:

அப்போது திடீரென எனது காலில் விழுந்து விட்டார் வாஜ்பாய். இதைப் பார்த்து நான் அதிர்ந்து விட்டேன். நாட்டுக்கே தலைவர் எனது காலில் விழுந்து விட்டாரே என்று அதிர்ச்சியாகி விட்டது.

கடவுளாக எண்ணி காலில்..:

அப்போது எனக்கு அருகில் இருந்த ஒருவர் தமிழில் என்னிடம், நீங்க செய்த செயலைப் பார்த்து வியந்து உங்களை கடவுளாக எண்ணி காலில் விழுந்தார் வாஜ்பாய். தப்பா நினைச்சுக்காதீங்க என்று கூறினார்.

தங்க ராசா வாஜ்பாய்:

அந்த மாதிரி ஒரு தங்க ராசா இன்று இறந்து விட்டது எனக்கு வருத்தமாக உள்ளது. எனது காலில் விழுந்து வாஜ்பாய் வணங்கியதை என்னால் மறக்க முடியாது.

சம்பந்தி என்று அழைத்தார்:

முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எனக்கு ஒரு விருது அளித்தார். அப்போது என்னை அன்போடு சம்பந்தி என்று கூறினார். அவரும் இறந்து விட்டார். வாஜ்பாயும் இறந்து விட்டார் என குரல் தழுதழுக்க கூறியுள்ளார்.