சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பான டுவீட்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை சுமார் அரை மணிநேரம் விளக்கமாக கூறினார்.
அதில் கடைசியாக ’தமிழகத்தில் புரட்சி வெடிக்க வேண்டும் என்றும் ’அந்தப் புரட்சியால் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அவ்வாறு புரட்சி ஏற்பட்டால் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியிருந்தார். மேலும் இப்போது ஆட்சி மாற்றம் இல்லையெனில் இனி எப்போதுமே இருக்காது என்றும் அவர் ஆவேசமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வந்தனர். ஒரு சிலர் ரஜினியை விமர்சனம் செய்தும் ஒரு சிலர் ரஜினிக்கு பாராட்டையும் தெரிவித்து வந்ததால் சமூக வலைதளங்களில் இருவேறு கருத்துக்கள் எழுந்து வந்தன.
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அரசியல் மாற்றம்… ஆட்சி மாற்றம். இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்கிற கருத்தை பாமர மக்களும் பேசுகின்ற, சிந்திக்கின்ற வகையில் கொண்டு போய் சேர்த்த ஊடகங்களுக்கும்,பத்திரிகைகளுக்கும், சமூக வலைதளங்களுக்கும், மன்ற உறுப்பினர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளார். இந்த டுவீட் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Comment
You must be logged in to post a comment.