கமல்ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் 1996-ம் ஆண்டு வெளியான வெற்றிப்படம் இந்தியன். கமல், அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்தார்.

 

இவற்றில் வயதான அப்பாவாக, இந்தியன் தாத்தாவாக நடித்த சேனாபதி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இதன் இரண்டாம் பாகம் 22 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உருவாக உள்ளது.

கமல் – ஷங்கர் கூட்டணியே மீண்டும் இணைகிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திலும் கமல் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல்பாகத்தில் வெளிநாட்டிற்கு தப்பிப்போன சேனாபதி, இரண்டாம் பாகத்திலும், அதே ரோலில் தொடர, அவருடன் இன்னொரு கமலும், இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறாராம். நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கனும் முக்கியமான ரோலில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.

வயதான கமலுக்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்கள் வர வழைக்கப்பட உள்ளனர். படப்பிடிப்புக்கான லோகேசன் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டார் இயக்குநர் ஷங்கர். சமீபத்தில் உக்ரைன் சென்று வந்தார். மற்றொருபுறம், ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில், இந்தியன் 2க்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது. அடுத்தமாதம் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகிறது.