9 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த நாடோடிகள் படம் பெரிய வெற்றியை பெற்றது. இயக்குனர் சமுத்திரகனியை அடையாளம் காட்டிய படம், அனன்யா, அபிநயா, பரணி ஆகியோருக்கும் அடையாளத்தை கொடுத்தது. தற்போது இதன் இரண்டாம் பாகம் தயாராகிறது.

சமுத்திரக்கனி மீண்டும் இயக்குகிறார். முதல் பாகத்தில் நடித்த சசிகுமார், பரணி, நமோ நாராயணா மட்டும் மீண்டும் நடிக்கிறார்கள். இவர்களுடன் அஞ்சலி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர் துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைக்கிறார், என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரிக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் திருவள்ளூர் அருகே உள்ள கிராமத்தில் பூஜையுடன் தொடங்கியது. சசிகுமார், அஞ்சலி, அதுல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர். “காதலை காப்பாற்றும் நண்பர்கள் என்கிற நாடோடிகளின் ஒன்லைன்தான் இந்தப் படத்திற்கும் கதை. அதைத் தவிர மற்றதெல்லாம் புதிதாக இருக்கும். பத்து வருடங்களுக்கு முன்பிருந்து இப்போது பல மாற்றங்கள் நடந்திருக்கிறது. அது படத்திலும் இருக்கும்” என்கிறார் சமுத்திரக்கனி.