நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளை படக்குழு வித்தியாசமான முறையில் மேற்கொண்டு வருகிறது.
இரும்புத்திரை’ இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹீரோ’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். கல்யாணியுடன் ‘நாச்சியார்’ பட நடிகை இவானா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ரோபோ ஷங்கர், அபய் தியோல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் விறுவிறுப்பான டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் வெளியிட்டிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘ஹீரோ’ படத்தின் ‘மால்டோ கிட்டபுலே’,‘ஹீரோ’ ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் டிச.20ம் தேதி ரிலீசாகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீசையொட்டி புரொமோஷன் பணிகளை வித்தியாசமான முறையில் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இப்படத்தின் புரொமோஷனுக்காக வீடியோ கேம் வெளியிட்ட படக்குழு அதன் அடுத்தக்கட்டமாக சத்யம் தியேட்டரின் வாசலில் பேனர் வைத்ததும், ரயில் முழுவதும் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டர் ஒட்டப்பட்டது.
அதைத் தொடர்ந்து சென்னையின் மிக முக்கியமான சாலையில் அமைந்துள்ள பெரிய கட்டிடங்களில் ‘ஹீரோ’ படத்தின் லோகோவை லைட்டில் புரொஜெக்ட் செய்து அசத்தியுள்ளனர். சூப்பர் ஹீரோ கதையம்சத்துடன் உருவாகியுள்ள ‘ஹீரோ’ திரைப்படத்திற்கு ‘பேட்மேன்’ சீரிஸ் திரைப்படங்களில் ஆபத்தின் போது பேட் சிக்னல் புரொஜெக்ட் செய்வது போன்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

Leave A Comment
You must be logged in to post a comment.