பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்ட நிலையில், இரவுப்பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூஜித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது ‘சிவராத்திரி’ என்றே கொண்டாட வேண்டும்’ என்று வேண்டினாள்.

‘அந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல், மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை (சிவனை)ப்பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து, முடிவில் மோட்சத்தையும் அருள வேண்டும்’ என்றும் உமாதேவி வேண்டிக்கொண்டாள். சிவபெருமானும், ‘அப்படியே ஆகட்டும்!’ என்று கூறி அருள் புரிந்தார்.

அந்த இரவு தான் மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி.

மற்றொரு கதை:

ஒரு முறை வேடன் ஒருவன் வேட்டையாட காட்டுக்கு சென்றான். வெகுநேரம் அலைந்து திரிந்தும் ஒரு விலங்கு கூட அவனிடம் சிக்க வில்லை. பொழுதும் நன்றாக இருட்டிவிட்டது.

அப்போது அங்கே புலி ஒன்று வந்துவிட, அதற்கு பயந்து அங்கிருந்த வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். அந்த புலி அந்த மரத்தையே சுற்றி சுற்றி வந்தது. மரத்தில் கண் அயர்ந்தால், கீழே விழுந்து புலிக்கு இரையாகிவிடக்கூடும் என்பதால் தூக்கம் வராமல் இருக்க அந்த மரத்தின் இலைகளை கீழே பறித்துப்போட்டுக் கொண்டே இருந்தான்.

அந்த இலைகள் எல்லாம் மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்தின் மீது விழுந்து கொண்டிருந்தன. மேலும், அன்றைய தினம் மகா சிவராத்திரி என்பதால் இரவு முழுவதும் சிவபெருமானை கண் விழித்து பூஜித்த பலனையும் தன்னை அறியாமலேயே பெற்றான்.

அதன்காரணமாக, அந்த வேடனுக்கு முக்தி அளித்து மோட்சத்தை அருளினார் சிவபெருமான் என்கிறது புராணக்கதை.

மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப்போகும் என்கிறார்கள்.