மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையை காமராஜர் படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். அவரின் ரமணா கிரியேஷன் படத்தை தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துலுவாக ஒய்.ஜி.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கிறனர்.
மறைந்த முன்னாள் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார்.
படத்தில் சிறுவனாக எம்.ஜி.ஆர் வாழ்ந்த காட்சியை படமாக்க சரியான சிறுவன் கிடைக்காமல் தவித்தனர். 100க்கும் மேற்பட்ட சிறுவர்களை ஆடிசன் செய்து பார்த்தும் செட்டாகவில்லை. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறு வயது எம்.ஜி.ஆராக நடித்து வருகிறான்.



Leave A Comment
You must be logged in to post a comment.