காமெடி நடிகர் ஜெகன், முதல் முறையாக நாயகனாக நடிக்கும் படம், எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே. மனீஷாஜித், நிகிதா, அஸ்மிதா உள்ளிட்ட பலர், இதில் நடிக்கின்றனர்.

கவிஞர் பிறைசூடன், வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், டீக்கடை நடத்தும் நாயகிக்கு உதவும் போலீசாக, ஜெகன் வருகிறார். டீக்கடையில் நடப்பதாக, பல காமெடி காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக, படக்குழுவினர் தெரிவித்தனர்.
படம் குறித்தும், தன் திரைப்பயணம் குறித்தும், ஜெகன் கூறியதாவது: கே.வி.ஆனந்த், கோ படத்தை எடுக்க முன்வந்த போது, முதலில் வேறு ஒரு நடிகருக்கு, போன் செய்தார்; அவர் எடுக்கவில்லை. அதன் பின், ஜீவாவுக்கு போன் செய்தார்; அவர், உடனே எடுத்து விட்டார். இதையடுத்து, கோ படத்தில் நாயகனாகும் வாய்ப்பு, ஜீவாவுக்கு சென்றது. அனைத்து வகையான திறமை இருந்தால் தான், சினிமாவில் ஜெயிக்க முடியும். நான் வளர்ந்த, அதே சின்னத்திரையில் ஜொலித்த பலர், என்னை விட உயர்ந்த நிலைக்கு வந்துள்ளனர். அதற்கு, அவர்களின் உழைப்பு தான் காரணம்.
‘மிமிக்ரி’ திறமை மட்டும் இருந்தால், நடிகராகி விட முடியாது. எனக்கும், நயன்தாராவுடன் ஜோடியாக நடிக்க ஆசை தான்; வாய்ப்பு கிடைத்தால், யார் வேண்டாம் என்பர். நான் நடித்த கரிச்சான்குருவி, முகம், சகுந்தலாவின் காதலன் உள்ளிட்ட படங்கள், வெளியாக உள்ளன. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே படம், வழக்கமான சினிமாவாக இல்லாமல், புதுவிதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.



Leave A Comment
You must be logged in to post a comment.