ஜோதிகா தற்போது சினிமாவில் தனக்கென தனி பாணி அமைத்துக் கொண்டு பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஹிந்தியில் வித்யாபாலன், கங்கனா ரணாவத், மலையாளத்தில் மஞ்சுவாரியார், தமிழில் நயன்தாரா பாணியில் வலுவான ஹீரோயின் பாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கத் தொடங்கியிருக்கிறார். 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் படங்கள் அவருக்கு அப்படி அமைந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வித்யாபாலன் நடிப்பில் வெளிவந்த தும்ஹாரி சுலு ஹிந்திப் படத்தின் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இந்தியில் சுரேஷ் திரிவேனி இயக்கிய இந்தப் படத்தில் வித்யாபாலனுடன் நேகா துபியா, மனவ் கவுல் நடித்துள்ளனர். டி.சீரிஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. 17 கோடியில் தயரான படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது.
ஒரு நடுத்தர குடும்பத்து பெண் நள்ளிரவு ரேடியோ ஜாக்கியாக பணியாற்றுவதுதான் கதை. பகலில் குடும்ப குத்துவிளக்காக குடும்பத்தை கவனிப்பவர். இரவில் ரேடியோ ஜாக்கியா மாறி இளைஞர்களுடன் கிளுகிளுப்பாக பேசி மகிழ்விப்பார். இப்படி ஒரு காண்ட்ராஸ்டான வாழ்க்கையை அவர் எப்படி வாழ்கிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தை இப்போது தமிழில் ரீமேக் செய்யும் முயற்சி நடந்து வருகிறது. ஜோதிகாவிற்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக் கொடுத்த மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் இதனை இயக்குவார் என்றும், ஜோதிகாவின் கணவராக பிரகாஷ்ராஜ், அல்லது சமுத்திரகனி நடிக்கலாம் என்றும் தெரிகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் என்கிறார்கள்.
தற்போது மணிரத்னம் இயக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. மார்ச் மாதம் இவரது போர்ஷன் படமாக்கப்படுகிறது. அதன் பிறகு அதாவது ஏப்ரல் மாதத்திலிருந்து இதில் ஜோதிகாக நடிக்கலாம் என்று தெரிகிறது. “தும்ஹாரி சுலு ரீமேக்கில் ஜோதிகா நடிக்க இருப்பது உண்மை தான். ஆனால் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை” என்கிறது ஜோதிகா தரப்பு.



Leave A Comment
You must be logged in to post a comment.