சினிமாவின் அடுத்த கட்டமாக தற்போது வெப் சீரியல் வளர்ந்து வருகிறது. மாதவன், நந்தா, பாபிசிம்ஹா, பிரியாமணி, உள்ளிட்ட முன்னணி நடிகர், நடிகைகளும் வெப் சீரியல் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் சுனைனா.

ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் நடித்து கொண்டிருந்தவர் காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழுக்கு வந்தார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி ஒலிபெருக்கி நிலையம், திருத்தணி, நீர்பறவை, சமர், வன்மம், தெறி, நம்பியார், தொண்டன் உள்பட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் ஆண்டனியின் காளி படத்தில் நடித்தார்.

இப்போது ஜே.எஸ்.நந்தினி இயக்கும் நிலா நிலா ஓடி வா என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். இதில் சுனைனாவுடன் ஸ்ரீகிருஷ்ணதயாள், அஸ்வத், மிஷா கோஷல், அனுபமா குமார் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் நந்தினி கூறியதாவது:

அஸ்வின், ஓம் என்ற ஒரு பச்சை குத்தும் கலைஞராக நடித்திருக்கிறார். அவரின் கல்லூரி காதலி நிலா (சுனைனா) ஒரு முழுமையான, கொடூரமான வாம்பயராக மாறி விட்டார் என்பதை உணர்ந்த பிறகு வாழ்க்கை தடம் மாறுகிறது. சுனைனா ஒரு வாம்பயராக நடிக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அவரது அழகிய தோற்றம் மற்றும் தனிச்சிறப்பான நடிப்பு ஆகியவை கலந்து கதாபாத்திரத்திற்கு உயிராக அமைந்தன. ஒரு வாம்பயர் அடிப்படையிலான ரொமாண்டிக் – காமெடி தொடர் என்றார்.