நடிகை ஜோதிகா இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Jyothika Birthday Surya Jo

சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சூர்யாவை திருமணம் செய்து கொண்டார். சூர்யா – ஜோதிகா இருவரும் இணைந்து பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் ஆர், ஜில்லுனு ஒரு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு குடும்ப பெண்ணாக மாறிய ஜோதிகா கிட்டத்தட்ட 6 வருடங்கள் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இது அவருக்கு மட்டுமல்ல, அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். இது அவரது நடிப்புக்கு கடும் சவாலாக அமைந்தது. இப்படத்தின் மூலம், தான் ஒரு துணிச்சலான நடிகை என்பதை நிரூபித்தார்.

ஏனென்றால், திருமணத்திற்குப் பிறகு ஒரு நடிகைக்கு ரசிகர்கள் அவ்வளவு ஏலிதில் ஆதரவு அளிப்பதில்லை. அப்படியிருக்கும் போது ஜோதிகாவிற்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது. 2ஆவது ஆட்டத்தில் தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தி அதில் நடித்து வந்தார். அப்படி நடித்து ஹிட் கொடுத்த படங்கள் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, ஜாக்பாட் ஆகிய படங்களை குறிப்பிடலாம்.

பிரியதர்ஷன் இயக்கத்தில் வந்த டோலி சஜா கே ரஹ்னா என்ற பாலிவுட் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்தப் படம் கமர்ஷியல் ரீதியாக போதுமான வரவேற்பு பெறவில்லை என்று பிரியதர்ஷனே தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் அஜித்தின் வாலி படம் ஜோதிகாவுக்கு பல விருதுகளை பெற்றுத்தந்தது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில், இவரது நடிப்பில் வந்த பள்ளியைப்பற்றிய ராட்சசி என்ற படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து ஜாக்பாட் என்ற படத்தில் நடித்தார். இப்படமும், நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது கார்த்தியுடன் இணைந்து இன்னும் டைட்டில் வைக்கப்படாத படத்திலும், பொன் மகள் வந்தாள் என்ற படத்திலும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இவ்வளவு ஏன், இதயம் நல்லெண்ணெய், பாராஹன் புட்வேர், ஆர்.எம்.கே.வி, நெஸ்கஃபே, கம்போர்ட், சரவணா ஸ்டோர்ஸ், சந்தூர் சோப் ஆகிய விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இன்று தனது 42 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஜோதிகாவை சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ஜோதிகாவின் படங்கள்:

குஷி – ஜோதிகாவிற்கு திருப்பு முனையாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று. எஸ்.ஜெ,சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. ஹிந்தியில் குஷி என்ற டைட்டிலில் வெளியானது. கன்னடத்தில், எனோ ஒந்தாரா என்ற டைட்டிலில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

பிரியமான தோழி – குடும்ப கதையை மையப்படுத்திய இப்படத்தில் மாதவன், ஜோதிகா முன்னணி ரோலில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் ஓரளவு வசூல் பெற்ற இப்படம், 8 வருடங்களுக்குப் பிறகு கன்னடத்தில் ஹோ என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது.

காக்க காக்க – ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இப்படத்தில் சூர்யா – ஜோதிகா இணைந்து நடித்திருந்தனர். பிளாக்பஸ்டர் ஹிட் மட்டுமல்ல, சூர்யாவின் சினிமா வரலாற்றில் அவருக்கு மறக்க முடியாத படமாகவும் அமைந்தது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல விமர்சனம் பெற்றது.

திருமலை – ரொமாண்டிக் ஆக்‌ஷன் கதையை மையமாக வைத்து இப்படம் வெளியானது. இதில், விஜய், ஜோதிகா முன்னணி ரோலில் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் கௌரி என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது.

மன்மதன் – ரொமாண்டிக் க்ரைம் த்ரில்லர் பாணியில் இப்படம் வெளியானது. சிம்பு இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். கன்னடத்தில் மதனா என்ற டைட்டிலில் இப்படம் வெளிவந்தது.

ஷாக் – ரவி தேஜாவுடன் ஜோதிகா இப்படத்தில் இணைந்து நடித்திருந்தார். கன்னடத்தில் பிரின்ஸ் என்ற டைட்டிலில் இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகா ஒரு சிறந்த நடிகை. இவரை வெள்ளித்திரையில் பார்க்க ரசிகர்கள் அதிகம் விரும்புகின்றனர். நடிப்பில் இவரது அர்ப்பணிப்பைக் கண்ட சியான் விக்ரம், ஜோதிகாவை லேடி கமல் ஹாசன் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஜோதிகாவின் எதிர்கால முயற்சிகளுக்கு அவருக்கு அனைத்து வகையிலும் அன்பும், அதிர்ஷ்டமும் கிடைக்க வாழ்த்துவோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோதிகா..!