நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த மார்ச் மாதத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் கணிசமான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஒருபுறம் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்தியாவில் அறுபத்தைந்து லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐம்பத்தைந்து லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

பொதுமக்கள் மட்டுமல்லாது மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பெரும்பாலானோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி வரும் நிலையில் திரைப்பட நடிகர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.

பாலிவுட்டில் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட திரைத்துறையினர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்திருக்கும் நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பெற்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தமன்னா தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமன்னாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.