நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியிருப்பதாகவும், விரைவில் படத்தின் டிரைலர் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளன.

Ennai Nokki Payum Thotta

எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் தயாரிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ்-மேகா ஆகாஷ் நடித்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் நீண்ட வருடங்களாக ஷூட்டிங்கில் இருந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.

தர்புக சிவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜோமோன் டீ ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், சில காரணங்களால் படத்தின் பணிகள் தாமதமாகின.

‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டிரைலர் மற்றும் ரிலீசிற்காக தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கும் வேளையில், இப்படத்தின் டிரைலர் தற்போது தயாராகி வருவதாகவும், அடுத்த வாரம் டிரைலர் ரிலீசாக வாய்ப்புள்ளதாகவும் நமக்கு தகவல் கிடைத்துள்ளன. மேலும், இப்படம் வரும் ஜூலை.26ம் தேதி ரிலீசாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறுதியாக ‘பக்கிரி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த தனுஷ், தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இயக்குநர் துரை செந்தில்குமாரின் திரைப்படம், கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என தனுஷ் அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.